Published : 18 Jul 2021 11:55 AM
Last Updated : 18 Jul 2021 11:55 AM
இலங்கை அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவண், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பு நகரில் தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவண் புதிய மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஷிகர் தவண் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 5,977 ரன்கள் சேர்துள்ளார். 6 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 23 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஷிகர் தவண் 6 ஆயிரம் ரன்களை எட்டிவிட்டால், இந்த சாதனையை நிகழ்த்திய 10வது இந்திய பேட்ஸ்மன் எனும் பெருமையைப் பெறுவார்.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் மிக விரைவாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது இந்திய பேட்ஸ்மேன் எனும்மைல்கல்லையும் தவண் எட்டுவார். இதற்கு முன் விராட் கோலி, 6 ஆயிரம் ரன்களை 136 இன்னிங்ஸில் எட்டினார். தவண் இன்றைய ஆட்டத்தில் எட்டினால்,140வது இன்னிங்ஸில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய பெருமையைப் பெறுவார்.
பிசிசிஐ தலைவரும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 6 ஆயிரம் ரன்களை 147 இன்னிங்ஸில் எட்டியுள்ளார். ஒருவேளை தவண் 23 ரன்கள் சேர்த்து 6 ஆயிரம் ரன்களை இன்றைய ஆட்டத்தில் எட்டினால், கங்குலியின் சாதனையை தவண் முறியடிப்பார். கங்குலி 147 இன்னிங்ஸில் எட்டிய மைல்கல்லை தவண் 140 இன்னிங்ஸில் எட்டிய பெருமையைப் பெறுவார்.
உலகளவில் 6 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டிய வீரர் என்ற வகையில் தவண் 4-வது வீரர் என்ற சிறப்பையும் பெறுவார். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 123 இன்னிங்ஸிலும், கோலி 136 இன்னிங்ஸிலும், நியூஸிலாந்து ேகப்டன் கேன் வில்லியம்ஸன் 139 இன்னிங்ஸிலும் எட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் 35வயது225 நாட்கள் ஆகிய தவண், முதல்முறையாக அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பேற்ற வயதான கேப்டன் தவண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கு தலைமை ஏற்கும்25-வது கேப்டன் தவண் ஆவர்.
இலங்கை அணிக்கு எதிராக 1000 ரன்களை எட்டுவதற்கு தவணுக்கு இன்னும் 17 ரன்கள்தான் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டவும் தவணுக்கு 35 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தச் சாதனையை எட்டினால், 14-வது இந்திய வீரர் எனும் முத்திரையை தவண் பதிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT