Last Updated : 18 Jul, 2021 10:40 AM

 

Published : 18 Jul 2021 10:40 AM
Last Updated : 18 Jul 2021 10:40 AM

#TokyoOlympics ஒலிம்பிக் கிராமத்துக்குள் புகுந்த கரோனா: 3 தடகள வீரர்கள் தொற்றால் பாதிப்பு

படம் | ஏஎன்ஐ

டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 3 வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியம் கொண்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதிகோலாகலமாகத் தொடங்க இருக்கும் நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகபாதுகாப்பு அம்சங்கள், தீவிர பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்படக்கூடிய ஒலிம்பிக் கிராமத்துக்குள் தங்கி இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இந்த 3 வீரர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த அடையாளத்தை நிர்வாகக் குழுவினர் வெளியிடவில்லை.

இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வீரர்களுடன் வந்தவர்கள், ஒருவர் ஒப்பந்ததாரர், ஒருவர் பத்திரிகையாளர் என 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று போட்டிநிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியைக் காண வந்தவர்களில் 55 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் போட்டி நிர்வாக இயக்குநர் கிறிஸ்டோப் தூபி வெளியிட்ட அறிக்கையில் “ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இது வெறும் புள்ளிவிவரங்களோடு முடிந்துவிடாமல், தொடர்ந்து கண்காணிப்பிலும் ஈடுபடுவோம், தொடர்ந்து பரிசோதனைகளும் நடத்தப்படும்.

இதுவரை ஜப்பானுக்குள் வருவதற்கு முன் 18 ஆயிரம் வீரர், வீராங்கனைகளுக்கு 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. விமானநிலையத்தில் பரிசோதனைகள் நடத்தப்படுதோடு நாள்தோறும் கரோனா பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜூலை 1-ம் தேதியிலிருந்து 18 ஆயிரம் வீரர்கள் வெளிநாடுகளில் இருந்து ஜப்பான் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்கள் குறைந்தபட்சம் 2 முறை கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றபின்பே அனுமதிக்கப்பட்டார்கள். டோக்கியோ வந்தபின் புதிதாக கரோனா பரிசோதனையும் வீரர்களுக்கு எடுக்கப்பட்டது, ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழையும் முன்பும் கடுமையான பரிசோதனைகளும், தனிமைப்படுத்துதலும் செய்யப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் ஒரு குழுவினர் நேற்று டோக்கியோ புறப்பட்டுச் சென்று இன்று காலை அங்கு சென்றடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x