Published : 17 Jul 2021 10:44 AM
Last Updated : 17 Jul 2021 10:44 AM
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுநடைபெற வேண்டிய இந்தத் தொடர், கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தற்போது நடத்தப்பட உள்ளது.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 115-க்கும்மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும்.
இந்தநிலையில் டோக்கியோவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஆனால் தற்போது தலைநகர் டோக்கியோவில் மீண்டும் கரோனா அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தினார்.
ஆனால் தொற்று பாதித்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டு குடிமகன் என்பதை தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது.
அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் விளையாட்டு வீரர் அல்ல என்றும் ஆனால் விளையாட்டு ஏற்பாட்டுக்காக வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT