Last Updated : 11 Jul, 2021 05:33 PM

 

Published : 11 Jul 2021 05:33 PM
Last Updated : 11 Jul 2021 05:33 PM

#CopaAmerica நன்றிக் கடன் தீர்த்த லயோனல் மெஸ்ஸி: 28 ஆண்டுகளுக்குப்பின் அர்ஜென்டினாவுக்கு கோபா அமெரிக்கா கோப்பை

அர்ஜென்டினா கோபா அமெரிக்கா கோப்பையை வென்றபின் கேப்டன் மெஸ்ஸியை தூக்கி கொண்டாடிய சகவீரர்கள் | படம் உதவி ட்விட்டர்

பியூனோஸ் அயர்ஸ்

கோபா அமெரிக்காவில் 4 முறை இறுதிப்போட்டியில் தோல்வி, மிகப்பெரிய போட்டிகளில் தொடக்கத்திலேயே வெளியேறியது, தேசிய அணியில் இருந்து ஓய்வு அறிவிப்பு என பல கட்ட மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த லயோனல் மெஸ்ஸி இறுதியாக தனது அர்ஜென்டினா அணிக்கு 28 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரி்க்கா கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

தான்பிறந்த மண்ணின் உரிமையான அர்ஜன்டினா அணிக்கு ஒரு தேசிய அளவிலான கோப்பையை பெற்றுத் தரமுடியவில்லையே எனும் இயலாமை லயோனா மெஸ்ஸியின் மனதை நீண்டகாலமாக ரணமாக அழுத்திவந்தது. இதை பலமுறை அவரே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

2008 ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்ததைத் தவிர மிகப்பெரிய எந்த போட்டியிலும் தனது அணிக்கு கோப்பையை மெஸ்ஸியால் பெற்றுத் தரமுடியவில்லை. ஆனால், தான் வளர்ந்த ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு கோப்பைகளையும்,கோல்களையும், வெற்றிகளையும் மெஸ்ஸி குவித்தார்.

தாய்நாட்டு அணிக்கு எப்போது நன்றிக்கடன் தீர்க்கப் போகிறோம் என்று எண்ணிய மெஸ்ஸி நேற்று கோபா அமெரி்க்கா கோப்பையை வென்று கொடுத்து தனது நன்றிக்கடன் தீர்த்துவிட்டார். போட்டி நேரம் முடிந்து களநடுவர் விசில் ஊதி, அர்ஜென்டினா வென்றதாக அறிவித்தவுடன், மைதானத்தில் இருந்த மெஸ்ஸி முழங்கால் மண்டியிட்டு, மைதானத்தை முத்தமிட்டு கண்ணீர்விட்டார்.

28 ஆண்டுகளாக எந்தவிதமான பெரிய கோப்பைகளையும் வெல்ல முடியாமல் அர்ஜென்டினாவில் நிலவிய பஞ்சத்தை மெஸ்ஸி தீர்த்துவிட்டார். 4 கோல்கள், 5 கோல்கள் அடிக்க உதவியதற்காக சிறந்த வீரருக்கான விருதையும் மெஸ்ஸி பெற்றார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் 151 போட்டிகளில் பங்கேற்ற வீரர் எனும் சாதனையையும் மெஸ்ஸி படைத்தார்.

அடுத்ததாக மெஸ்ஸி முன்னால் சவாலாக இருக்கப்போவது கத்தாரில் அடுத்த ஆண்டு நடக்கும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியாகும். கடந்த 1986-ம் ஆண்டு கேப்டனாக மாரடோனா கடைசியாக கோப்பையை வென்று கொடுத்தபின் இதுவரை அர்ஜென்டினா அணி கடந்த 35 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருக்கிறது. அதை நனவாக்குவாரா மெஸ்ஸி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டீகோ மரடோனா என்னும் மகத்தான வீரனைக் கண்ட அர்ஜென்டினா மக்களுக்கு, மெஸ்ஸி வாரிசாகக் கிடைத்தார். 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போது, மெஸ்ஸியின் நிழலில் டீகோவை மக்கள் கண்டனர்.

“மெஸ்ஸி எங்களுக்கு உலகக்கோப்பையை வென்று தர வேண்டும்” என்று ஒவ்வொரு முறையும் அர்ஜென்டினா மக்கள் முழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த மக்களின் கோபா அமெரிக்கா கனவு நிறைவேறியுள்ளது. உலகக் கோப்பைக் கனவு பற்றி அடுத்த ஆண்டு தெரியும்.

ஆனால் உண்மையில் அர்ஜென்டினா மெஸ்ஸி என்ற தனிமனிதனைச் சுற்றியுள்ள அணி இல்லை, பலநட்சத்திர வீரர்கள் இருந்தாலும், மெஸ்ஸி என்ற சூரியனைச் சுற்றியே அர்ஜென்டினா கால்பந்து வலம் வருகிறது. பார்சிலோனாவிற்காக மெஸ்ஸி கலக்குகிறார் என்றால், அங்கு அவர் கேப்டன் இல்லை. ஆனால் தேசிய அணியின் கேப்டன் என்பதே அவர் மீதான அழுத்தத்தை பல மடங்கு அதிகரித்து வந்தது

அதைக் கடந்து தனது தாய்நாட்டு அணிக்கு கோப்பையை மெஸ்ஸி வென்று கொடுத்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு 20வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அர்ஜென்டீனாவுக்கு தங்கம் ஆகியவற்றைத் தவிர மெஸ்ஸியால் பெரிதாக தேசிய அணிக்கு ஏதும் செய்ய முடியவில்லை.

2006ம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிராக உலகக் கோப்பையில் வெளியேற்றம், அடுத்த ஆண்டில் கோபா அமெரி்க்கா கோப்பையில் பிரேசிலிடம் 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா தோற்றது மெஸ்ஸிக்கு அழுத்தத்தை தந்தது.

2014-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா கோப்பையை வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது மெஸ்ஸியின் மனதை உருக்குலைத்தது. சிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி வென்றாலும் தாய்நாட்டுக்காக கோப்பையை வெல்லமுடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது.

2015, 2016ம் ஆண்டுகளில் நடந்த கோபா அமெரி்க்காவில் மெஸ்ஸியின் நம்பிக்கையை சிலி அணி தகர்த்தது. இரு முறையும், பெனால்டி சூட்டில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோற்றது பேரதிர்ச்சியாக இருந்தது.

சிலி அணியிடம் 2-வது முறையாகத் தோற்றதும் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்தார். ஆனால், அதன்பின் மனமாற்றம் அடைந்து, மீண்டும் தேசிய அணிக்குள் வந்தார். 2019-ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸியின் ஆட்டம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

பயிற்சியாளர் லியோனல் ஸ்காலோனி தலைமையில் அர்ஜென்டினா அணி இளம் வீரர்களுடன் கலக்கியது. இறுதியாக 2021ம் ஆண்டில்தான் தனது அணிக்காக கோப்பா அமெரிக்காவில் கோப்பையை ஏந்தி தனது நன்றிக் கடனை மெஸ்ஸி செலுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x