Last Updated : 11 Jul, 2021 10:14 AM

 

Published : 11 Jul 2021 10:14 AM
Last Updated : 11 Jul 2021 10:14 AM

ஹெட்மயர், பிராவோ அருமை: ஆஸிையை பிழிந்தது மே.இ.தீவுகள்: 39 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வி

மே.இ.தீவுகள் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஹெட்மயர், டுவைன் பிராவோ கூட்டணி | படம் உதவி ட்விட்டர்

செயின்ட் லூசியா 


ஹெட்மயரின் அதிரடி அரைசதம், டுவைன் பிராவோவின் பொறுப்பான ஆட்டம், ரஸலின் காட்டடி ஆகியவற்றால் செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திேரலிய அணியை 56ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மே.இ.தீவுகள் அணி.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மே.இ.தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து அடுத்தடுத்து, சேஸிங்கில் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது இது முதல்முறையாகும்.

மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஹெட்மயரின் பேட்டிங்கும், டுவைன் பிராவோவுடன் அமைத்த கூட்டணிதான்.

ஒரு கட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது ஹெட்மயர், பிராவோ கூட்டணிதான் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை எட்ட உதவினர்.

அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 36 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து(4சிக்ஸர்,2பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

வழக்கமாக கடைசிநிலை வீரராக களமிறங்கும் டுவைன் பிராவோ திடீரென நடுவரிசையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார். தன்னை களமிறக்கியது சரியான முடிவுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஹெட்மயருக்கு ஒத்துழைத்து பிராவோ பேட் செய்தார்.

பிராவோ 34 பந்துகளில் 47 ரன்களுடன்(3சிக்ஸர்,ஒருபவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வழக்கமான காட்டடி வீரர் ஆன்ட்ரூ ரஸல் 2சிக்ஸர்,2பவுண்டரி என 8 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மே.இ.தீவுகள் அணி கடைசி 10 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவரையும் பந்துவீச்சையும் விட்டு வைக்காமல் நொறுக்கி ஹெட்மயர், சிம்மன்ஸ், ரஸல், பிராவோ ஆகிய 4 பேரும் விளாசிவிட்டனர்.

ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க், ஹேசல்வுட், அகர், ஸம்பா, கிறிஸ்டியன் என அனைவரின் பந்துவீச்சும் கிழித்து தொங்கவிடப்பட்டது.

மே.இ.தீவுகள் அணியில் பந்துவீச்சு ஆஸி. வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருந்தது. காட்ரெல், வால்ஷ் ஜூனியர், ரஸல், பிராவோ ஆகிய 4 வீரர்களும் பல்வேறு வேறுபாடுகளை பந்துவீச்சில் வெளிப்படுத்தி விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர். நடுவரிசை பேட்ஸ்மேன்களான மார்ஷ், ஹென்ரிக்ஸ், பிலிப் ஆகியோரின் விக்கெட்டை வால்ஷ் வீழ்த்தி சரிவுக்கு வழிகாட்டினர்.

கிறிஸ் கெயில் மிகச் சிறந்தவீரர்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரின் பேட்டிங் செயல்பாடு ஒவ்வொரு போட்டியிலும் மோசமாகிவருகிறது. கடந்த 9 டி20 இன்னிங்ஸில் கெயில் 102 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் 16 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். ஏராளமான டாட் பந்துகளையும் விட்டுக்கொடுத்தார். ஆதலால், டி20 உலகக் கோப்பைக்குள் கெயில் ஃபார்முக்கு திரும்புவது அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை 2-வது பேட்டிங் கொலாப்ஸ். மே.இ.தீவுகள் அணியை குறைத்து மதிப்பிட்டு ஜூனியர் வீரர்களை ஆஸ்திரேலிய அணி அழைத்து வந்தமைக்கு சரியான பாடத்தை ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொடுக்கிறார்கள். தொடர்ந்து 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை முதுகெலும்பு உடைக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது போட்டியில் நடுவரிசை, கடைசிவரிசை வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். முதல் போட்டியைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் மிட்ஷெல் மார்ஷ் அரைசதம் அடித்தது மட்டும்தான் ஆறுதலான விஷயமாகும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ வேட்(0), கேப்டன் ஆரோன் பின்ச்(6), ஹென்ரிக்ஸ்(19), பிலிப்ப்(13) என சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆனால், அடுத்த 39 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய 6 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மே.இ.தீவுகள் தரப்பில் 8 வீரர்கள் பந்துவீசினர். இதில் வால்ஷ் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஸல், பிராவோ, கெயில், எட்வார்ட்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x