Published : 10 Jul 2021 06:20 PM
Last Updated : 10 Jul 2021 06:20 PM
இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை, இங்கிலாந்து அணி வீரர் ஓலே போப் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஓலே போப் முக்கியமானவராக இருந்துவந்தார்.
இந்த டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து அணியில் உள்ள பல்வேறு வீரர்களும் பயிற்சிக்காக கவுண்ட்டி அணியில் விளையாடி வருகின்றனர். இதில் சர்ரே அணிக்காக ஓலே போப் விளையாடி வந்தார். கடந்த 2-ம் தேதி கென்ட் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் ஓலே போப் பேட்டிங் செய்தபோது அவரது தொடையின் தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இந்தக் காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து போப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால், நீண்ட ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை போப் விலகியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஓலே போப்புக்குத் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை போப் விளையாடமாட்டார்.
சர்ரே அணிக்காக கென்ட் அணிக்கு எதிரான கவுண்ட்டி போட்டியில் விளையாடியபோது, போப்பின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பாக போப் உடல்நிலையைக் குணப்படுத்தத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், சர்ரே உடல்நலக் குழுவினர் இணைந்து போப்பின் உடல்நிலை மீண்டும் இயல்புக்குக் கொண்டுவரத் தேவையான பயிற்சி, சிகிச்சையை அளிப்பார்கள் என இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT