Published : 21 Feb 2016 11:00 AM
Last Updated : 21 Feb 2016 11:00 AM
விவ் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் அதிவேக டெஸ்ட் சத சாதனையை முறியடித்த மெக்கல்லம், நேற்று ஒவ்வொரு பந்தையுமே 4 ரன்களுக்கோ அல்லது சிக்சருக்கோ அடித்து விரட்டும் ‘மூடில்’ இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பசுந்தரை ஆடுகளத்தில் மெக்கல்லம் நேற்று விளாசித்தள்ளினார்.
ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் விளாசி சதம் அடித்த மெக்கல்லத்திற்கு சாதனை பற்றி தெரியவில்லை. மைதான ஒலிபெருக்கியில் அறிவித்த பிறகுதான் அவருக்கே தெரிந்துள்ளது.
“சாதனை பற்றி எனக்கு தெரியவில்லை. நான் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அல்லது சிக்சருக்கு அடிப்பதில் குறியாக இருந்தேன். ஆனால் இதற்கு முன்பு சாதனையை வைத்திருந்த அனைவரையும் மதிக்கிறேன். இந்த டெஸ்ட் போட்டியை வென்றால் நன்றாக இருக்கும், அதுதான் முக்கியம்.
நான் வளரும் காலத்தில் விவ் ரிச்சர்ட்ஸ்தான் எனது ஆதர்சம். அவரது சாதனையைக் கடந்தது பெருமை அளிக்கிறது. ஆனால் அவரைப் போல் ஆட முடியாது, அவர் ஒரு அற்புதமான அதிரடி பேட்ஸ்மென். ஒரு விதத்தில் அவரது சாதனையைக் கடந்தது எனக்கு தர்ம சங்கடமாகவே உள்ளது” என்றார்.
நேற்று மெக்கல்லத்திற்கு அதிர்ஷ்டமும் இருந்தது. ஜேம்ஸ் பேட்டின்சன் பந்தை மெக்கல்லம் ஒரு பளார் ஷாட் ஆட கல்லியில் மிட்செல் மார்ஷ் அற்புதமாக கேட்ச் செய்தார். ஆனால் அது நோ-பால் ஆனது.
இது பற்றி மெக்கல்லம் கூறும்போது, “அடித்தவுடன் அது 4-தான் என்று முடிவுகட்டிவிட்டேன். ஆனா மிகப்பெரிய கேட்ச் அது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய கேட்ச்கள் அபாரம். ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச்களும் அபாரமான கேட்ச்கள். அது நோ-பால் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
2-வது பந்தை மிக மோசமாக ஒரு சுற்று சுற்றினேன், அது ஸ்லிப் தலைக்கு மேல் சென்றது. மேலும் இது போன்ற பிட்ச்களை எதிர்கொள்ளும் போது நாம் ஆக்ரோஷமாகவே ஆட வேண்டும். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. நானும் கோரி ஆண்டர்சனும் சேர்ந்து எடுத்த ரன்கள் முக்கியமானது, அந்த பார்ட்னர்ஷிப் ஒரு கேளிக்கையாக அமைந்த்து.
இது போன்ற பிட்ச்களில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசும் போது நின்றெல்லாம் ஆட முடியாது. இது 200 ரன்கள் பிட்ச்தான் இதில் 65 ஓவர்களில் 370 எடுத்துள்ளோம். வெற்றியில் முடிந்தால் திருப்தியாக இருக்கும்” என்றார் மெக்கல்லம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT