Published : 07 Jul 2021 02:39 PM
Last Updated : 07 Jul 2021 02:39 PM
தல, கூல் கேப்டன், கிரேட் ஃபினிஷர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் 40-வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் தோனிக்கு வாழத்துகளைப் பதிவிட்டும், தோனியின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டும், ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்கள், முன்னாள் வீரர்கள், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஐசிசி என தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
தல’ தோனி என்று செல்லமாக சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி 2004இல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். ஓராண்டுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தன் அறிமுக கேப்டன்சி தொடரிலேயே அதுவும் பரம வைரி பாகிஸ்தானை இறுதியில் வீழ்த்தி கோப்பையை வென்று புகழ்பெற்றார்.
அடுத்தக்கட்டமாக 2011 உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் கோப்பைகளை வென்று 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக வலம் வருகிறார். 2015 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை இவரது கேப்டன்சியில் இந்திய அணி வந்தது.
2009-ல் இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற இடத்துக்கு இட்டுச் சென்றார். 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 2017-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். உலகின் சிறந்த பினிஷர் என்று கூறுமளவுக்கு இந்திய அணியை ஏகப்பட்ட போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 போட்டிகளில் 4876 ரன்களை எடுத்துள்ளார், இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் எடுத்த இரட்டைச் சத 224 ரன்களை மறக்க முடியாது.
350 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10,773 ரன்களைக் குவித்துள்ளார். 10 சதங்கள், 73 அரைசதங்கள். 323 கேட்ச், 123 ஸ்டம்பிங், 98 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1617 ரன்களை எடுத்துள்ளார். 2 அரைசதங்கள்.
கேப்டன்சியில் ஒருநாள் போட்டிகளில் 199 போட்டிகளில் தலைமை தாங்கி 110 வெற்றி 74 தோல்விகளுடன் முன்னிலை வகிக்கிறார். சாதனைகள் பல படைத்த கேப்டன் கூல், கிரேட் பினிஷர் பிறந்த தினத்தில் இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. எனக்கு நீங்கள் நண்பர், சகோதரர், ஆசான் அனைத்தும் நீங்கள்தான். உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் வழங்கிட வேண்டும். சிறந்த வீரராகவும், தலைவராகம் இருந்தற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ ஜாம்பவான், அனைவருக்கும் உற்சாகமூட்டுபவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்துகள்” எனத் தெரிவித்துள்ளது
ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, முகமது கைப் ஆகியோரும் தோனிக்கு இந்த சிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அதில் “ இளைஞர்கள் எவ்வாறு வெல்ல வேண்டும் என இளைஞர்களுக்கு தாதா கற்றுக்கொடுத்தார், தோனி, அதை பழக்கமாகவே மாற்றிவிட்டார். இரு தலைவர்களும் வேறுபட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியக் கிரிக்கெட்டை செம்மைப்படுத்திய தோனிக்கும், கங்குலிக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஐசிசி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கேப்டன் கூல் என்று அனைவரும் அழைப்பதற்கு சில காரணம் இருக்கிறது. தோனியின் பிறந்தநாளான இன்று சில இனிய நினைவுகளைப் பகிர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனின் ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியாவில் தோனி அடித்த சிறந்த சிக்ஸர்கள் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
சச்சின் அவுட்டானால் டிவியை ஆஃப் செய்த 90 களில் கிரி்க்கெட் பார்த்த தலைமுறையை கடைசிப் பந்துவரை போட்டியை இருக்கையில் நுனியில்வரை அமரவைத்தவர் தோனி.
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும். என்றைக்குமே அவர் ரசிகர்களின் ராஞ்சி ராஜாதான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT