Published : 06 Jul 2021 11:09 AM
Last Updated : 06 Jul 2021 11:09 AM
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் காண்பதற்கு ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட தடை முற்றிலும் நீக்கப்பட்டது. இதனால் அரங்கு முழுவதும் தடையின்றி ரசிகர்கள் போட்டியைக் கண்டுகளிக்கலாம்.
இதற்கான அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று வெளியிட்டார். இதையடுத்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அரங்கு நிறைய ரசிகர்கள் குவிந்திருப்பதைக் காண முடியும்.
ஸ்கை ஸ்போர்ட் சேனலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அளித்த பேட்டியில், “ விளையாட்டுப் போட்டிகள், உள்ளரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு கரோனா வைரஸை எவ்வாறு சமாளிப்பது என அனுபவம் வந்துவிட்டது.
ஆதலால், மக்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு, அவர்களே முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளரங்குகள், வெளியரங்குகளில் பார்வையாளர்கள் கூடுதவதற்குத் தடையில்லை. இரவு நேர கிளப்புகள் உள்ளிட்டவை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள், விழாக்களில் மக்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையும் விலக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு ஆதரவாகச் செயல்படும் பார்மி ஆர்மி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஜூலை 19-ம் தேதி முதல் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் முழுமையாக அமர்ந்து அனைத்துப் போட்டிகளையும் கண்டுகளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ நாட்டிங்காமில் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. ரசிகர்கள் சூழப் போட்டி நடத்துவது உற்சாகம்” எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, நியூஸிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கடந்த மாதம் குறைந்த அளவிலான பார்வையாளர்களுடனே நடத்தப்பட்டது. அப்போது கரோனா பாதிப்பு இருந்ததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 14-ம் தேதி துர்ஹாம் நகரில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT