Last Updated : 29 Jun, 2021 05:30 PM

1  

Published : 29 Jun 2021 05:30 PM
Last Updated : 29 Jun 2021 05:30 PM

27 ஐசிசி கிரிக்கெட் தொடர்கள்: 7 கேப்டன்கள், 5 கோப்பைகள்- நம்பர் ஒன் இந்திய கேப்டன் யார்?

டி. கார்த்திக்

முதல் முறையாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியைச் சந்தித்தது இந்திய கிரிக்கெட் அணி. கேப்டனாகி இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோப்பை ஒன்றையும் விராட் கோலியால் வெல்ல முடியாமல் போய்விட்டது. 1975ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் ஐசிசி தொடர்களில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் யார்?

சீனிவாஸ் வெங்கட்ராகவன்: 1975இல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பைக்கு மட்டுமல்ல, 1979இல் நடைபெற்ற இரண்டாம் உலகக் கோப்பைத் தொடருக்கும் இந்தியாவின் கேப்டனாக இருந்தவர். இரண்டு தொடர்களிலுமே பெயரளவில் விளையாடி லீக் சுற்றோடு காணாமல் போனது இந்திய அணி.

கபில்தேவ்: 1983இல் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன். இந்த வெற்றிக்குப் பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு தனி கவனம் கிடைக்கத் தொடங்கியது. ஐசிசி கோப்பையை முதன்முதலில் வென்ற கேப்டனும் இவரே. 1987 உலகக் கோப்பைக்கும் கபில்தேவ்தான் கேப்டன். அரையிறுதி வரை சென்ற இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. இருமுறை ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக இருந்து ஒரு முறை கோப்பை வென்றது அணி.

முகம்மது அசாரூதீன்: 1992, 1996, 1999 என மூன்று உலகக் கோப்பைத் தொடருக்கு கேப்டனாக இருந்தும் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அசாரூதினால் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக 1996 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை இந்திய அணி சென்றது. 1998இல் முதன்முதலில் தொடங்கிய ஐ.சி.சி. நாக் அவுட் (இப்போது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி) தொடருக்கும் அசாரூதின்தான் கேப்டன். இந்தப் போட்டியிலும் அரையிறுதி வரை மட்டுமே இந்தியா முன்னேறியது. 4 முறை ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக இருந்து ஒருமுறை கோப்பையை அசாரூதினால் வெல்ல முடியவில்லை.

சவுரவ் கங்குலி: 2000இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சவுரவ் கங்குலிதான் கேப்டன். இந்தத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இந்தியா தோல்வியடைந்தது. தொடர்ந்து 2002இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதி வரை முன்னேறியது. மழையால் தடைப்பட்ட இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் கூட்டாக சாம்பியன் ஆயின. அந்த வகையில் கங்குலி வென்ற ஐசிசி தொடர் இது. 2003 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய கங்குலி தலைமையிலான இந்திய அணி, தோல்வியைத் தழுவியது. 2004 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கங்குலி தலைமையில் இந்திய அணி பிரகாசிக்கவில்லை. 4 ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக இருந்து ஒரு முறை கோப்பை வென்றார் கங்குலி.

ராகுல் டிராவிட்: 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு கேப்டனாக இவருடைய தலைமையில் இந்திய அணி சோபிக்கவில்லை. 2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுமோசமாகத் தோல்வியடைந்து நாடு திரும்பியது. இரு முறை ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக இருந்து ஒரு கோப்பையும் வெல்லவில்லை.

எம்.எஸ்.தோனி: 2007 டி20 உலகக் கோப்பை அறிமுகத் தொடருக்கு கேப்டனாக இருந்து முதல் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்தவர். தொடர்ந்து 2009-இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் தொடர், டி20 உலகக் கோப்பைக்கும் கேப்டனாக இருந்த தோனியால் கோப்பை வெல்ல முடியவில்லை. 2010 டி20 உலகக் கோப்பையிலும் சூப்பர் 8 உடன் இந்தியா வெளியேறியது. 2011இல் நடைபெற்ற உலகக் கோப்பையை இந்திய அணி தோனி தலைமையில் வென்றது.

2012 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுடன் இந்தியா திரும்பியது. 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று வகையான ஐசிசி தொடர்களை வென்ற ஒரே கேப்டனானார் தோனி. 2014 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியிலும், 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியிலும், 2016 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியிலும் இந்தியா தோல்வியடைந்தது. 10 முறை ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக இருந்து மூன்று முறை கோப்பை வென்றிருக்கிறது இந்தியா.

விராட் கோலி: 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு கோலிதான் கேப்டன். இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி கோப்பையைக் கோட்டைவிட்டது. 2019 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2021இல் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கோலி தலைமையில் இந்திய அணி தோல்வியடைந்தது. 3 முறை ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக இருந்து ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x