Published : 22 Jun 2021 09:06 PM
Last Updated : 22 Jun 2021 09:06 PM
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று நியூஸிலாந்து அணி 101 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் என்கிற நிலையிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்தது.
களமும், சிறப்பான பந்துவீச்சும் நியூஸி. பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தியது. நிதானமாக ரன் சேர்ப்பில் ஈடுபட்ட நியூஸி. பேட்ஸ்மேன்களை ஷமியின் பந்துவீச்சு திணறடித்தது. உணவு இடைவேளைக்கு முன்பு ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்த நியூஸி. அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பின்பு சில ஓவர்கள் வில்லியம்ஸனும், க்ராண்ட் ஹோமும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். க்ராண்ட் ஹோம் 13 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ஜேமிஸன் விரைவாக ரன் சேர்க்க முற்பட்டார். 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்தில் வீழ்ந்தார்.
கேப்டன் கேன் வில்லியம்ஸன் அரை சதத்தை நெருங்க, இஷாந்த் சர்மா வீசிய பந்து பேட்டின் எட்ஜில் பட்டு ஸ்லிப்பில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியின் கைகளில் தஞ்சமடைந்தது. 49 ரன்களுக்கு வில்லியம்ஸன் பெவிலியன் திரும்பினார். ஆனால், இந்தக் கட்டத்தில் நியூஸி. அணி இந்திய அணியை விட 4 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
நீல் வேக்னர் ரன் ஏதும் சேர்க்காமல் அஸ்வினின் சுழலில் சிக்கினார். அதிரடியாக ஆட முற்பட்ட டிம் சவுத்தி 46 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் நியூஸி. அணி 249 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஏற்கெனவே முதல் நாள் ஆட்டமும், நான்காம் நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT