Published : 22 Jun 2021 02:09 PM
Last Updated : 22 Jun 2021 02:09 PM
தொடர் மழையின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி பாதிக்கப்பட்டிருப்பதால் மிக முக்கியமான கிரிக்கெட் போட்டிகளை இங்கிலாந்து/பிரிட்டனில் திட்டமிடக் கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் நடந்த இரண்டு நாட்களுமே ஒளி மங்கியதாலும், மழையாலும் ஆட்டம் தடைப்பட்டு வந்தது.
தொடர்ந்து திங்கட்கிழமை அன்று நான்காம் நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன், "இதைச் சொல்வதற்கு எனக்குக் கடினமாக இருக்கிறது. ஆனால், இப்படி மிக முக்கியமான கிரிக்கெட் போட்டி, அதுவும் ஒரே ஒரு போட்டிதான் என்று திட்டமிடும்போது அதை பிரிட்டனில் விளையாடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் மழையால் கைவிடப்பட்டிருப்பதால் கூடுதலாகக் கையிலிருக்கும் இருப்பு நாளான நாளையும் ஆட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT