Published : 21 Jun 2021 05:39 PM
Last Updated : 21 Jun 2021 05:39 PM
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி மழையால் தொடர் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், இந்தப் போட்டி டிரா / சமன் ஆனால், கோப்பை யாருக்கு என்பது குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. திங்கட்கிழமை தொடங்கவிருந்த நான்காம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது. மேலும், இந்த நாள் ஆட்டம் கைவிடப்படும் வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது முக்கியமான சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் இருப்பு நாள் (reserve day) ஒன்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், முதல் நாள் மற்றும் நான்காம் நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால் கூடுதலாக இருக்கும் இருப்பு நாளைப் பயன்படுத்திக் கொண்டாலும் இந்தப் போட்டியில் முடிவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
அப்படி எந்தத் தரப்பும் வெற்றி பெறாமல் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தால் இந்தியா - நியூஸிலாந்து என இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று ஐசிசி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதைக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐசிசி மீண்டும் உறுதி செய்துள்ளது.
இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்படுவது குறித்து கிரிக்கெட் ஆட்டத்தின் ஆர்வலர்கள் பலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். இனி இப்படி நடக்காமல் இருக்க ஐசிசி உறுதி செய்ய வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் இறுதிப் போட்டி என்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்தாமல் 3 டெஸ்ட் போட்டிகள் நடத்தியதில் அதில் அதிக வெற்றி பெற்றவர்களை வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT