Published : 16 Jun 2021 05:25 PM
Last Updated : 16 Jun 2021 05:25 PM
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று, நியூஸிலாந்துக்கு எதிராக நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன் காயம்பட்ட உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹனுமா விஹாரி உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய அணியில் இருந்த மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. இங்கிலாந்து தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேலும் அணியில் இல்லை.
முக்கியமாக கே.எல்.ராகுல் இறுதிப் பட்டியலில் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியினர், அவர்களுக்குள் ஆடிய பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி ஒரு அணிக்கும், கே.எல்.ராகுல் ஒரு அணிக்கும் கேப்டனாக இருந்தனர். இதில் கே.எல்.ராகுல் நன்றாக ஆடியிருந்தாலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன் முதல் தேர்வாக இருந்த வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோலி கேப்டன் பதவிக்கு வந்ததிலிருந்தே, அணியில் இருக்கும் அத்தனை பேரும் நன்றாக விளையாடினாலும் முதல் தேர்வாக இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் உமேஷ் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வின், ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அக்ஸர் படேலுக்கு இடமில்லை.
இறுதி அணி: விராட் கோலி, ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், விருத்தமான் சாஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT