Published : 16 Jun 2021 04:08 PM
Last Updated : 16 Jun 2021 04:08 PM
2019ஆம் ஆண்டு தனது அணி உலகக் கோப்பையை வென்றிருந்தால் தான் ஓய்வு பெறலாம் என்று நினைத்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று, இந்தியா - நியூஸிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதை முன்னிட்டு நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ராஸ் டெய்லர் பேட்டி அளித்துள்ளார்.
"இரண்டு வருடங்களுக்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தது. அதுவும் தோற்கும்போது, நாம் விளையாடிய கடைசி உலகக் கோப்பை போட்டி இதுதானோ என்றும் தோன்றும். ஆனால், இன்று இங்கு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நன்றாக உணர்கிறேன். ஆனால் அன்று அந்தப் போட்டியில் வென்றிருந்தால் நான் ஓய்வு பெற்றிருக்கலாம். நல்லவேளையாக அப்படி எதையும் நான் செய்யவில்லை.
இந்திய அணியைப் பொறுத்தவரை நீண்ட காலமாகவே சிறந்த அணியாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் நாட்டிலேயே இந்திய அணி வென்றது. அதைப் பார்க்க சிறப்பாக இருந்தது. மிகச் சிறந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலகத் தரமான பந்துவீச்சைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தது.
இந்திய அணி வீரர்களின் பட்டியலைப் பாருங்கள். உலகத்தரமான வீரர்கள்தான் உள்ளனர். அவர்கள் எந்த மாதிரியான அணியை அமைத்தாலும் சரி அதில் உலகத் தரமான வீரர்கள் இருப்பார்கள். பல காலமாக இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. மிகக் கடுமையான போட்டியாக இது இருக்கும்.
இங்கிலாந்திலும் இந்திய அணி நிறைய வென்றுள்ளது. பயிற்சி ஆட்டங்களிலும், வலைப் பயிற்சியிலும் ட்யூக் பந்தில் ஸ்விங் மற்றும் பவுன்ஸை அவர்கள் ரசித்திருப்பார்கள். அவர்களுக்கான சவாலாக நாங்கள் இருப்பதை எதிர் நோக்கியுள்ளேன்" என்று ராஸ் டெய்லர் பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் ஏற்கெனவே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணி, சில நாட்களுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. இது அணிக்கு நல்ல முன்தயாரிப்பாக இருந்ததாகவும் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT