Last Updated : 15 Jun, 2021 06:32 PM

1  

Published : 15 Jun 2021 06:32 PM
Last Updated : 15 Jun 2021 06:32 PM

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர்: உறுதி செய்த பிசிசிஐ

கோப்புப் படம்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் செயல்படுவார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்துள்ளனர்.

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடிவிட்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்த அணி விளையாடவுள்ளது. கரோனா நெருக்கடியால், இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் முடித்தபிறகே தாயகம் திரும்பவுள்ளது.

இதனால் ஜூலை மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் இலங்கை சுற்றுப்பயணத்துக்கு இன்னொரு அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷிகர் தவண் தலைமையில் 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்த அணி விளையாடவுள்ளது. புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்பட்டது. இதைத் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்துள்ளனர்.

தற்போது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்குச் செல்வதற்கு முன், 7 நாட்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனிமையிலும், அடுத்த 7 நாட்கள் உள்ளரங்கில் பயிற்சி பெறும் விதமாக மிதமான கட்டுப்பாடுகளுடனும் அனைவரும் தனிமையில் இருப்பார்கள்.

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட் செயல்பட்டது நினைவுகூரத்தக்கது. ஜூன் 28 அன்று இலங்கைக்குச் செல்லவுள்ள இந்திய அணி, அங்கு 3 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தங்க வைக்கப்படுவார்கள். பின்பு ஜூலை 4 வரை தனிமையில் பயிற்சி மேற்கொள்ளவிருக்கின்றனர். ஜூலை 13-ல் தொடர் ஆரம்பமாகிறது. ஜூலை 25 வரை இந்தச் சுற்றுப்பயணம் நீடிக்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x