Published : 12 Jun 2021 04:26 PM
Last Updated : 12 Jun 2021 04:26 PM
தாகா ப்ரீமியர் லீக் போட்டியில் கோபத்தில் மோசமாக நடந்து கொண்டதற்காக முன்னாள் வங்கதேச கிரிக்கெட் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியுட்டுள்ளார்.
சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பந்து வீசிய ஷகிப், நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசினார். பின்னர் மீண்டும் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
இந்த இரண்டு சம்பவங்களும் காணொலியாக இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டன. பலரும் ஷகிப்பின் இந்த செயலை கண்டித்துள்ளனர். வங்கதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக அறியப்படும் ஷகிப், தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் கலீத் மகமூத் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
தற்போது, தான் கோபப்பட்டது குறித்து ஷகிப் மன்னிப்புக் கோரியுள்ளார். "அன்பார்ந்த ரசிகர்களே, எனது பொறுமையை இழந்து கோபப்பட்டு, ஆட்டத்தைப் பார்த்துவந்த அனைவரது அனுபவத்தையும் கெடுத்ததற்கு, முக்கியமாக வீட்டிலிருந்து ஆட்டத்தைப் பார்த்து இதனால் வருத்தமடைந்தவர்களிடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு அனுபவம் வாய்ந்த வீரனாக நான் அது போல நடந்திருக்கக் கூடாது. ஆனால் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் மீறி இப்படி நடந்துவிடும். அணிகளிடமும், அதன் நிர்வாகத்திடமும், தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகளிடமும் எனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போல மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன் என்று நம்புகிறேன். நன்றி" என்று ஷகிப் அல் ஹசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஷகிப் அல் ஹசனுக்கு நான்கு போட்டிகளில் ஆட தடை விதித்தும், அந்நாட்டின் ரூபாய் மதிப்பில் 5 லட்சம் அபராதம் விதித்தும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம், ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமீறலுக்காக ஷகிப்புக்கு 12 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT