Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான சுனில் ஷேத்ரி சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் உலகளாவிய நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
36 வயதான சுனில் ஷேத்ரி இந்த சாதனையை 2022-ம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஏஎப்சி கோப்பை தொடர்களுக்கான ஆரம்பக்கட்ட தகுதி சுற்றில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று முன்தினம் தோஹாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நிகழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் சுனில் ஷேத்ரி 79-வது நிமிடத்திலும், கூடுதல் நேரத்திலும் என 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி வங்கதேசத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணிக்கு கடந்த 6 வருடங்களில் கிடைத்த முதல் வெற்றியாகவும், அதேவேளையில் வெளிநாட்டில் கடந்த 20 வருடங்களில் கிடைத்த முதல் வெற்றியாகவும் இது அமைந்தது.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் நடப்பு வீரர்களில் அதிக கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்தஅர்ஜெண்டினாவின் லயோனல்மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தை தன்வசப்படுத்தினார் சுனில் ஷேத்ரி. மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளில் இதுவரை 72 கோல்கள் அடித்துள்ளார். அதேவேளையில் சுனில் ஷேத்ரி 74 கோல்களை அடித்துள்ளார். இந்த வகையில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 103 கோல்கள் அடித்து முதலிடம் வகிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT