Last Updated : 28 Dec, 2015 04:29 PM

 

Published : 28 Dec 2015 04:29 PM
Last Updated : 28 Dec 2015 04:29 PM

ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி அபாரம்: தோல்வியின் பிடியில் தென் ஆப்பிரிக்கா

டர்பன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 303 ரன்களை அடுத்து தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 3-ம் நாளான இன்று 214 ரன்களுக்குச் சுருண்டது.

டீன் எல்கர் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்து தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கேரி கர்ஸ்டன் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாக இருந்த பிறகு தற்போது டீன் எல்கர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

137/4 என்ற நிலையில் எல்கர் 67, பவுமா 10 ரன்கள் என்று 3-ம் நாள் இன்னிங்ஸை தொடங்கியது தென் ஆப்பிரிக்கா. நேற்று டுபிளெஸ்ஸிஸை 2 ரன்களில் காலி செய்த மொயீன் அலி இன்று மேலும் தனது சாதுரிய சுழற்பந்து வீச்சினால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்று தொடக்கத்தில் ஸ்டூவர்ட் பிராட் நேற்றைய தனது அபாரப் பந்து வீச்சின் தொடர்ச்சியாக 2-வது பந்திலேயே டெம்பா பவுமாவை பவுல்டு செய்தார், தாழ்வாக வந்த பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார் பவுமா. டீன் எல்கர் தொடர்ந்து லெக் திசையில் ரன்களை சேகரித்து வந்தார்.

இந்நிலையில் டீன் எல்கர், டுமினி ஆகிய 2 இடது கை வீரர்கள் இருந்த நிலையில் அலிஸ்டர் குக் மிகச்சரியாக ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலியை அறிமுகம் செய்தார். அஸ்வினிடம் திக்கித் திணறிய டுமினி, இம்முறை மொயீன் அலியின் அதே போன்ற அருமையான ஆஃப் ஸ்ப்ன் பந்தில் எட்ஜ் எடுக்க 2 ரன்களில் ஸ்டோக்ஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அபாட்டும் மொயீன் அலியின் ஆஃப் ஸ்பின்னுக்கு ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து சடுதியில் நடையைக் கட்டினார். மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஜேம்ஸ் டெய்லர் பிடித்த கேட்சை கள நடுவர் ஏற்கவில்லை, இதனால் 3-வது நடுவர் பார்வைக்குச் சென்று அவுட் பெறப்பட்டது.

பிறகு டேல் ஸ்டெய்ன் (17), எல்கர் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 54 ரன்களைச் சேர்த்தனர். ஸ்டெய்ன் 52 பந்துகள் தாக்குப்பிடித்து கடைசியில் மொயீன் அலி பந்தை அடிக்க முயன்று அவுட் ஆனார்.

புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் ஸ்டீவன் ஃபின் ஒரே ஓவரில் பியட் மற்றும் மோர்கெலை வீழ்த்த தென் ஆப்பிரிக்காவின் இன்னின்ஸ் 214 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. பிராட் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஃபின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

89 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் சற்று முன்வரை விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இன்று இன்னமும் 64 ஓவர்கள் மீதமுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x