Published : 07 Jun 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2014 12:00 AM

1970 உலகக் கோப்பை - பிரேசில் எழுச்சி

1970-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மெக்ஸிகோ நடத்தியது. இந்த போட்டிக்கு தயாராவதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கொலம்பியாவில் பயிற்சி மேற்கொண்டது.

அந்த அணியின் கேப்டன் பாபி மோரி, ஒருவரது கை செயினை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை மெக்ஸிகோவுக்கு அனுமதிக்க கொலம்பியா மறுத்துவிட்டது. எனினும் அவர் மீதான திருட்டு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டு அணி வீரர்களுடன் இணைந்தார்.

சிவப்பு அட்டை அறிமுகம்

இந்த உலகக் கோப்பை போட்டியில் தான் வீரர்களை எச்சரிப்பதற்காக மஞ்சள் அட்டையும், அவர்களை வெளியேற்றுவதற்காக சிவப்பு அட்டையும் காண்பிக்கும் முறையை ஃபிபா அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு அட்டை எதுவும் காண்பிக்காமல் முரட்டுத்தனமாக விளையாடும் வீரர்களை எச்சரித்து வெளியேற்றும் நடைமுறையே இருந்தது.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 52 முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிவப்பு அட்டை பயன்படுத்தப்படவில்லை. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி புதிய எழுச்சியுடன் விளையாடியது. 6 போட்டிகளில் பங்கேற்ற அணி அவை அனைத்திலும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

பிரேசில், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, உருகுவே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அரையிறுதியில் உருகுவே அணியை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்த பிரேசில், இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் ஜெய்ர்ஜின்கோ 7 கோல்களையும், பீலே 4 கோல்களையும் அடித்தனர். உலகக் கோப்பை கால்பந்து

சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரேசில் வெற்றது. பிரேசில் பயிற்சியாளர் மரியோ, அணி வீரராகவும், பயிற்சியாளராகவும் கோப்பையை வென்றவர் என்ற சிறப்பைப் பெற்றார்.

தெரியுமா உங்களுக்கு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) 1904-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டாலும், சர்வதேச அளவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த சுமார் 30 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு வரை ஒலிம்பிக் போட்டி மட்டுமே சர்வதேச அணிகள் மோதும் கால்பந்து போட்டியாக இருந்தது.

அப்போது சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு, ஃபிபாவும் இணைந்து கால்பந்து போட்டிகளை நடத்திவந்தன. ஒலிம்பிக்கில் நடத்தப்படும் கால்பந்து போட்டியை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சினை எழுந்தது. இதையடுத்து 1928-ம் ஆண்டில் ஒலிம்பிக்கில் இருந்து கால்பந்து போட்டியை விலக்கிக் கொள்வது என்று ஃபிபா முடிவுவெடுத்தது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது.



1970 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டங்கள் - 32

மொத்த கோல்கள் - 95

ஒரு போட்டிக்கு சராசரி கோல்

மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 16,73,975

டாப் ஸ்கோர்

கிரிட் முல்லர் (ஜெர்மனி) - 10 கோல்கள்

ஜெய்ர்ஜின்கோ (பிரேசில்) - 7 கோல்கள்

குபிலாஸ் (பெரு) - 5 கோல்கள்

பீலே (பிரேசில்) - 4 கோல்கள்

பைஷுவெட்ஸ் (சோவியத்) - 4 கோல்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x