Published : 01 Jun 2021 03:44 PM
Last Updated : 01 Jun 2021 03:44 PM
2021 ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, சக வீரரும் நியூஸிலாந்து வீரருமான கெயில் ஜேமிஸனை டியூக்ஸ் பந்தின் மூலம் பந்துவீசக் கேட்டுக்கொண்டார். அதை ஜேமிஸன் மறுத்து, கோலி விரித்த வலையில் ஜேமிஸன் சிக்காமல் தப்பித்துவிட்டார் என்று நியூஸிலாந்து வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வரும் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியும், இந்திய அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டியூக் பந்துகள் பந்துவீச்சுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாகவே கெயின் ஜேமிஸனை பந்துவீச கோலி கேட்டபோது அதற்கு ஜேமிஸன் மறுத்துள்ளார்.
ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸி. வீரர் டேன் கிறிஸ்டியன் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ஆர்சிபி அணி வீரர்கள் நாங்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். நியூஸிலாந்து வீரர் ஜேமிஸன் தன்னுடன் 2 டியூக் பந்துகளைக் கொண்டு வந்திருந்தார். இதைப் பார்த்த கேப்டன் விராட் கோலி, தனக்கு டியூக் பந்தில் பந்துவீச முடியுமா, நீங்கள் டியூக்ஸ் பந்தில் அதிகமாக பந்துவீசியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று ஜேமிஸனிடம் கேட்டார்.
அதற்கு ஜேமிஸன், “ஆம். 2 டியூக் பந்துகளைக் கொண்டுவந்துள்ளேன்” எனத் தெரிவித்தார். அதற்கு கோலி, “எனக்கு வலைப்பயிற்சியில் டியூக்ஸ் பந்தில் பந்துவீச முடியுமா” எனக் கேட்டார்.
உடனே ஜேமிஸன், “அதற்கு வாய்ப்பை இல்லை. உங்களுக்கு டியூக் பந்தில் பந்துவீச முடியாது” என்றார்.
டியூக்ஸ் பந்தில் ஜேமிஸன் பந்துவீசினால் அவரின் கைவிரல்களின் ரிலீஸ் பாயின்ட்டை கோலி தெரிந்துவிடுவார், பந்து எவ்வாறு வீசுகிறார், கையாள்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வார் என்பதால் ஜேமிஸன் மறுத்துவிட்டார்” என்று டேன் கிறிஸ்டியன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் 'டிம் சவுதி', 'தி கார்டியன்' நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''ஐபிஎல் தொடரின்போது விராட் கோலி, டியூக்ஸ் பந்தில் பந்துவீச ஜேமிஸனிடம் கேட்டதும், அதற்கு அவர் பந்துவீச மறுத்ததும் உண்மைதான். விராட் கோலி கேட்டதற்கு, ஜேமிஸன் எந்தவிதமான சிரமமும் இல்லாமல், தயங்காமல், யோசிக்காமல் உங்களுக்குப் பந்துவீச முடியாது எனத் தெரிவித்துவிட்டார். விராட் கோலி விரித்த சூசகமான விலையில் கெயில் ஜேமிஸன் விழுவார் என எதிர்பார்த்தார், ஆனால், ஜேமிஸன் தப்பித்துவிட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜேமிஸன் டியூக்ஸ் பந்தில் வீசும் பந்துவீச்சை கோலி எதிர்கொள்ள நேரிடும். அதற்காகவே ஜேமிஸனை பந்துவீச கோலி கேட்டுக்கொண்டார். அதை ஜேமிஸன் தவிர்த்துவிட்டார்''.
இவ்வாறு டிம் சவுதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT