Published : 01 Jun 2021 02:26 PM
Last Updated : 01 Jun 2021 02:26 PM

மன அழுத்தம், பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்: பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து விலகிய ஒசாகா விளக்கம்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, தான் மன அழுத்தம் மற்றும் பதற்றத்துக்கு உள்ளாகி இருப்பதால் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார் பாட்ரிகா மரியா டிக். இந்த ஆட்டத்தில் பாட்ரிக் மரியா டிக்கை 6-4, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தினார் ஒசாமா.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.

பிரெஞ்சு ஓபன் போட்டி விதிப்படி, போட்டியில் களமிறங்கும் இரு வீரர்கள் அல்லது வீராங்கனைகள் கண்டிப்பாக ஊடகங்களுக்கு சேர்ந்து பேட்டி அளிக்க வேண்டும். ஆனால், முதல் சுற்றில் வென்றபின் ஊடகங்களைச் சந்திக்க மறுத்துவிட்டு ஒசாகா சென்றுவிட்டார்.

போட்டி தொடரின் விதிமுறைகளுக்கு முரணாக வீரர்கள் செயல்பட்டால் 20 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம். இதையடுத்து, ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க மறுத்த ஒசாகாவுக்கு 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த சுற்றுகளில் ஒசாகா இதுபோன்று செய்தால், அவருக்கு அடுத்துவரும் கிராண்ட்ஸ்லாம்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக ஒசாகா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒசாகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நான் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன். 2018ஆம் ஆண்டு முதல் நான் பதற்றத்துக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகி இருக்கிறேன். கடுமையான காலம். என்னை அறிந்தவர்களுக்கு நான் ஒரு இன்ட்ரோவெர்ட் என்பது நன்கு தெரியும்.

நான் போட்டிகளில் விளையாடும்போது ஓய்வு நேரங்களில் காதுகளில் ஹெட்செட் அணிந்து பாடல் கேட்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சமூகத்தை நான் அணுகும்போது ஏற்படும் பதற்றத்தைப் அது தணிக்கும்.

நான் பொதுவெளியில் சரளமாகப் பேசுபவள் அல்ல. பாரீஸில் நான் மிகவும் மன அழுத்தத்தை உணர்கிறேன். எனவே தற்போது எனது மனநலத்தைப் பேணுவது அவசியம். நான் இந்தத் தொடரிலிருந்து விலகுகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக கமிட்டிக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன். நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மன அழுத்தம் குறித்து வெளிப்படையாகப் பேசியதற்காக ஒசாகாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x