Published : 30 May 2021 03:22 PM
Last Updated : 30 May 2021 03:22 PM
இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி(WTC) என்பது என்னைப் பொறுத்தவரை உலகக் கோப்பை ஃபைனல் போன்றதாகும் என நியூஸிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டன் நகரில் உள்ள ஏஜெஸ்பவுல் நகரில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணியினரும் பல்வேறு உத்திகளை வகுத்து தயாராகி வருகின்றனர். இந்திய அணி மும்பையிலிருந்து ஜூன் 2ம் தேதி லண்டன் புறப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் நியூஸிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் விளையாட உள்ளது.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வேக்னர் கிரிக்இன்ஃபோ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய அணிக்கு எதிராக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி(WTC) என்பது எனக்கு உலகக் கோப்பை ஃபைனல் போன்றது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை நான் நியூஸிலாந்து அணிக்காக ஒருநாள், டி20போட்டிகளில் விளையாடியது இல்லை.
ஆனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு(WTC) முன்னேறுவது, அதில் நான் விளையாடுவது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை என்னுடைய கவனம் , முழுத்திறமை முழுவதையும் டெஸ்ட்கிரிக்கெட்டுக்காகவே செலவிடுகிறேன். எனக்கு இந்தப் போட்டி உலகக் கோப்பை ஃபைனல் போன்றது.
உலக டெஸ்ட்சாம்யன்ஷிப் போட்டியில் இந்த இறுதிப்போட்டித்தான் தொடக்கம் இதற்கு எந்த வரலாறும் இல்லை என்பதால், இந்த தொடக்க சாம்பியன்ஷிப் போட்டியில் நாம் சிறப்பாக விளையாடுவது முக்கியம். உலகிலேயே சிறந்த அணியாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில்(WTC) விளையாடுவது மிக உயர்ந்தது.
உற்சாகமானதாக இருக்கும். அதேசமயம், இந்த டெஸ்ட் போட்டியை நினைத்து என்னைப் பதற்றப்படுத்திக் கொள்ளமாட்டேன். வழக்கமான டெஸ்ட் போட்டி போன்றுதான் இதையும் அணுகுவேன். இருப்பினும் இறுதிப்போட்டி எனக்கு உண்மையில் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பது உறுதி”
இவ்வாறு வாக்னர் தெரிவித்தார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 2ம் தேதி மும்பையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இங்கிலாந்துக்கு 3-ம் தேதிவருகிறது. அங்கு பிசிஆர் பரிசோதனை முடிந்தபின், 14 நாட்கள் “சாஃப்ட் கோரன்டைன்” அதாவது பயிற்சியில் ஈடுபடக்கூடிய தனிமைப்படுத்துதலுக்கு அனுமதி்க்கப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT