Last Updated : 10 Dec, 2015 01:34 PM

 

Published : 10 Dec 2015 01:34 PM
Last Updated : 10 Dec 2015 01:34 PM

மார்டின் கப்தில் சதம்; மெக்கல்லம் அதிரடி: நியூஸிலாந்து 409/8

டியுனெடின் மைதானத்தில் இன்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் தற்காப்பு உத்தியாக நியூஸிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆனால் மார்டின் கப்தில் அதைப் பயன்படுத்தி 156 ரன்களை விளாசினார். தேநீர் இடைவேளையின் போது 229/2 என்று இருந்த நியூஸிலாந்து அதன் பிறகு 180 ரன்கள் குவித்து மேலும் 6 விக்கெட்டுகளை இழந்தது.

மோசமான ஆஸ்திரேலிய தொடரைச் சந்தித்த மார்டின் கப்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் எடுத்தார். இது அவரது 3-வது சதமாகும். சரியான பார்மில் இருக்கும் கேன் வில்லியம்சன் 88 ரன்களையும், பிரெண்டன் மெக்கல்லம் 57 பந்துகளில் 75 ரன்களையும் எடுத்தனர்.

இலங்கை பவுலர்கள் 7 மெய்டன் ஓவர்களையே வீச முடிந்தது, நியூஸிலாந்து அடித்த மொத்த 57 பவுண்டரிகளில் மார்டின் கப்தில் மட்டும் 21 பவுண்டரிகளை விளாசினார்.

மார்டின் கப்தில் அழகான ஆஃப் டிரைவ் மூலம் பவுண்டரியுடன் கணக்கைத் தொடங்கி அதே பாணி ஷாட்டில் தனது சதத்தை எடுத்து முடித்தார். அதாவது சுரங்க லக்மல் பந்தை அழகாக பவுண்டரிக்கு விரட்டி சதம் பூர்த்தி செய்தார்.

ஆனால், இது எதிரணியினருக்கு வாய்ப்பு அளிக்காத இன்னிங்ஸ் என்று கூறுவதற்கில்லை, தொடக்கத்தில் இரண்டு எட்ஜ்கள் எடுத்தது. ஒரு ரன் அவுட் வாய்ப்பும் இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் கப்தில் தப்பினார். பிறகு அவர் 78 ரன்களில் இருந்த போது 2 எல்.பி முறையீடுகள் எழுந்தது. இதில் நடுவர் மறுத்த 2-வது முறையீட்டை அவர்கள் 3-வது நடுவரிடம் எடுத்துச் சென்றிருந்தால் கப்தில் நிச்சயம் அவுட் ஆகியிருப்பார். அதிர்ஷ்டம் துணையிருக்க கேன் வில்லியம்சன், கப்தில் ஆகியோர் 173 ரன்களைச் சேர்த்தனர். இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்தின் 2-வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஜோடி ரன்களாகும் இது.

பிறகு மெக்கல்லம்-கப்தில் ஜோடி இணைந்து 89 ரன்களைச் சேர்த்தனர்.

கப்திலுக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியாவில் தடுமாறிய கேப்டன் மெக்கல்லம் இலங்கை பந்து வீச்சை ரசித்து ஆடினார். துஷ்மந்த சமீரா ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள், ஒரு சிங்கிள் என்று அடுத்தடுத்த பந்துகளில் விளாசி அவர் அரைசதம் எட்டினார்.

மொத்தம் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 57 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய மெக்கல்லம், சிறீவதன பந்தை ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்ற வீரர்களில் லேதம் 22 ரன்களில் லக்மல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அபாயகரமான ராஸ் டெய்லர் 8 ரன்களில் நுவான் பிரதீப் பந்தில் எல்.பி.ஆனார். சாண்ட்னர், வாட்லிங் சொற்ப ரன்களில் சமீராவிடம் ஆட்டமிழந்தனர். டிம் சவுத்தி 2 ரன்களில் லக்மலிடம் ஆட்டமிழந்தார்.

ஆட்ட முடிவில் டக்கி பிரேஸ்வெல் 32 ரன்களுடனும் நீல் வாக்னர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லக்மல், பிரதீப், சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ரங்கனா ஹெராத் விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை.

முதல் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x