Published : 29 May 2021 03:07 PM
Last Updated : 29 May 2021 03:07 PM
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
14-வது ஐபிஎல் டி20 தொடர், கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன.
ஆனால், 2-வது சுற்று தொடங்கியவுடன் கொல்கத்தா அணியின் வீரர்கள் சந்தீப் வாரியர், சக்ரவர்த்தி, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா, சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சாஹா, சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லாத சூழல் இருப்பதையடுத்து, தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கரோனாவால் பாதியிலேயே நின்றுபோன ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.
இதில் கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை எங்கு நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் நிலவும் கரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் போட்டிகளை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT