Published : 26 May 2021 04:24 PM
Last Updated : 26 May 2021 04:24 PM
இங்கிலாந்து அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையே எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியைக் காண பரிசோதனை முயற்சியில் நாள்தோறும் 18 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 10 முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தில் பெரும்பகுதியான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், பரிசோதனை முயற்சியாக ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. அரங்கில் இருக்கையில் 70 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அமரவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், போட்டியைக் காண வரும் ரசிகர்கள் அனைவரும், போட்டிக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, மருத்துவப் பரிசோதனை செய்து கோவிட் நெகட்டிவ் சான்றிதழுடன்தான் வரவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியைக் காணவரும் பார்வையாளர்கள் அனைவரும் அனைத்துவிதமான கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், நெகட்டிவ் சான்றிதழ் பெற்றவர்கள் பங்கேற்றால் கரோனா தொற்று பரவுகிறதா, சாத்தியங்கள் இருக்கிறதா என்றும் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இனிமேலும் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிஸன் கூறுகையில், “மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் காண மீண்டும் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் அனுமதிப்பது மிகவும் முக்கியமானது. பலரின் வாழ்க்கையில் கடந்த 15 மாதங்களாக கிரிக்கெட் எவ்வளவு பெரிய பங்களிப்பு செய்துள்ளது என்பது தெரியும். அடுத்துவரும் மாதங்களில் மக்கள் நிறைந்த மைதானமாகக் கொண்டு செல்ல இனியும் நாங்கள் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT