Last Updated : 26 May, 2021 02:04 PM

 

Published : 26 May 2021 02:04 PM
Last Updated : 26 May 2021 02:04 PM

முஷ்பிகுர் ரஹிம் அபார சதம்: இலங்கைக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் | படம் உதவி: ட்விட்டர்.

தாகா

முஷ்பிகுர் ரஹ்மானின் சதம், மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் தாகாவில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம் அணி.

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 48.1 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ்படி, 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 40 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 103 ரன்களில் தோல்வி அடைந்தது.

இலங்கை அணிக்கு எதிராக வங்கதேசம் அணி கைப்பற்றிய முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 33 ரன்களில் வென்றிருந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வங்கதேசம் அணி கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகன் விருது சதம் அடித்த முஷ்பிகுர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

சதம் அடித்த முஸ்பிகுர் ரஹிம்

முதலில் பேட் செய்த வங்கதேச அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வரிசை வீரர்கள் தமிம் இக்பால் (13), சகிப் அல் ஹசன் (0), லிட்டன் தாஸ் (25), மொசாடக் ஹூசைன் (10) என விரைவாக ஆட்டமிழந்தனர். 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு மெகமதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் இருவரும் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். 70 பந்துகளில் முஷ்பிகுர் ரஹிம் அரை சதம் அடித்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மெகமதுல்லா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த, வீரர்களான ஹூசைன் (10), மெஹதி ஹசன் (0), சைபுதீன் (11) இஸ்லாம் (0) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்தாலும் சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 114 ரன்களில் சதம் அடித்து 125 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரி அடங்கும். ஒருநாள் தொடரில் முஷ்பிகுர் அடிக்கும் 8-வது சதமாகும்.

48.1 ஓவர்களில் 246 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் சண்டகன், சமீரா தலா 3 விக்கெட்டுகளையும், உதானா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதையடுத்து, டக்வொர்த் லூயிஸ்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலங்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து ஆடவில்லை, ஒருவர் கூட நீடித்த பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்தது.

71 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, அடுத்த 70 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களில் தோல்வி அடைந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குணதிலகா 24 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து இலங்கை அணி 103 ரன்களில் தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x