Published : 24 May 2021 01:14 PM
Last Updated : 24 May 2021 01:14 PM
இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கணித்துள்ளார்.
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்டனில் உள்ள ஏஜெஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டி முடிந்தபின் இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நிலவும் காலநிலை முற்றிலும் இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியை 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நியூஸிலாந்துக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் முழுத் திறமையை எதிர்பார்க்கலாம். அதிலும் இப்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். இங்கிலாந்து அணியில் முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், பி டீம்தான் நியூஸிலாந்து அணியுடன் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியபோது இந்தியாவின் ஏ அணிதான் விளையாடியது. அப்போது அந்த அணி வீரர்களின் திறமையைக் காண முடிந்தது.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்களான ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், பேர்ஸ்டோ, பட்லர் இல்லாமல் பங்கேற்பதால், எங்கள் பி அணியின் முழுத் திறமையையும் பார்க்கப் போகிறீர்கள்.
ஜோ ரூட் ஸ்கோர் செய்யாவிட்டால் எந்த வீரர் ஸ்கோர் செய்வார், ஆன்டர்ஸன், பிராட் ரன் அடிக்கவிட்டால், வேறு பந்துவீச்சாளர் யார் கட்டுக்கோப்பாக பந்துவீசப் போகிறார்கள் என்பதையும் பார்க்கப்போகிறீர்கள். இங்கிலாந்து அணியைப் பற்றிய பல கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை கிடைக்கும்.
ஆகஸ்ட் மாதம் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. அந்த நேரத்தில் இங்கிலாந்தில் காலநிலை வெதுவெதுப்பாகவும், வெயில் காலமாகவும் இருக்கும். ஆடுகளம் பெரும்பாலும் வறண்டுதான் இருக்கும். இதுபோன்று ஆடுகளம் வறண்ட சூழலில் இருப்பது இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக இருக்காது. இந்திய அணிக்குத்தான் சாதகமாக இருக்கும்.
வேறுவிதமான காலநிலையாக இருந்தால் இங்கிலாந்து அணிக்குத்தான் டெஸ்ட் தொடர் என்று உறுதியாகக் கூறுவேன். ஆனால், இந்த வறண்ட காலநிலை, இந்திய அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் உதவக்கூடும். ஆடுகளமும் சாதகமாக இருக்கும் என்பதால் டெஸ்ட் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றாலும் வியப்பில்லை. இந்த முறை இந்தியாவுக்குத்தான் சாதகமாகத் தொடர் அமையும்''.
இவ்வாறு மான்டி பனேசர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT