Published : 19 May 2021 12:06 PM
Last Updated : 19 May 2021 12:06 PM

கோவிட் தொற்றிலிருந்து மீண்ட சாஹா, மிஷ்ரா, பிரசித் கிருஷ்ணா

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர்கள் சாஹா, மிஷ்ரா, பிரசித் கிருஷ்ணா மூவரும் தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மே 4ஆம் தேதி அன்று ஐபிஎல் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ராவுக்கும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மே 8 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, தனிமைப்படுத்திக் கொண்டு மூவரும் சிகிச்சையில் இருந்து வந்தனர். தற்போது இவர்கள் மூவரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் சாஹா, "நான் மீண்டுவிட்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி" என்று சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அமித் மிஷ்ரா, "உண்மையான நாயகர்கள் நமது முன்களப் பணியாளர்கள். தொற்றிலிருந்து மீண்ட பிறகு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்களுக்கு எனது ஆதரவு, மனமார்ந்த பாராட்டும் உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் செய்து வரும் தியாகங்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்" என்று மருத்துவர்கள், செவிலியர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தோடு ட்வீட் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூஸிலாந்தை இந்தியா சந்திக்கவுள்ளது. இந்த ஆட்டத்துக்காக சாஹா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் அணியில் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் உடற்திறன் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால் அணியில் இடம்பெறுவார்கள்.

அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு வீரரான கே.எல்.ராகுல் குடல் வால் அழற்சி பிரச்சினைக்காக வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவரும் உடற்திறன் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x