Last Updated : 19 May, 2021 09:51 AM

 

Published : 19 May 2021 09:51 AM
Last Updated : 19 May 2021 09:51 AM

டி வில்லியர்ஸ் மீண்டும் விளையாட வரமாட்டார்: தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஏபி டி வில்லியர்ஸ் | படம் உதவி ட்விட்டர்

ஜோகன்னஸ்பர்க்


360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்விலிருந்து மீண்டும் வந்து சொந்த நாட்டு அணிக்காக விளையாடமாட்டார் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தன்னுடைய ஓய்வு நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை. மீண்டும் தேசிய அணிக்கு விளையாடவரமாட்டேன் என்று டி வில்லியர்ஸ் மறுத்துவிட்டதாக தென் ஆப்பிரிக்க வாரியம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ்கடந்த 2018ம் ஆண்டு திடீரென சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 114 டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன்கள், 228 ஒருநாள் போட்டிகளில் 9,577 ரன்கள், 78 டி20 போட்டிகளில் 1672 ரன்கள் என சாதனைக்கு அருகே சென்ற நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து பல நாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் டிவில்லியர்ஸ் விளையாடி வந்தார். குறிப்பாக ஐபிஎல் டி20 தொடரில் டிவில்லியர்ஸ் ஃபார்ம் ஒவ்வொரு தொடருக்கும் மெருகேறியது.

இந்நிலையில் கடந்த மாதம் டிவில்லியர்ஸ் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நான் மீண்டும் விளையாடினால் மிகப்பிரமாதமாக இருக்கும். எனக்கு இடம் கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது டி வில்லியர்ஸ் அளித்த பேட்டியில் “ தென் ஆப்பிரி்க்க தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் நான் ஐபிஎல் தொடர் முடிந்தபின் பேசுவேன். என்னுடைய உடற்தகுதி, பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை ஆய்வு செய்து, 2021டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்காக விளையாடுவது குறித்து பேசுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால், தென் ஆப்பிரி்க்கஅணிக்குள் மீண்டும் டி வில்லியர்ஸ் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்குள் வந்தால், டி20 உலகக் கோப்பை மேலும் சுவாரஸ்யமாகமாறும் என்று பேசப்பட்டது.

ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்ெகட் வாரியம் நேற்று ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது

ெதன் ஆப்பிரி்க்க அணிக்குள் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் வருவது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினோம். அந்த ஆலோசனையின் முடிவில், தான் ஓய்வு பெற்றுவிட்டது என்பது இறுதியான முடிவு. அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.மீண்டும் தேசிய அணிக்கு வரும் எண்ணமில்லை எனத் தெரிவி்த்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரி்க்க அணியில் 360 டிகிரி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் விளையாடுவார், அதிரடிஆட்டத்தைக் காணலாம் என்று எண்ணிய ரசிகர்களின் கனவு கலைந்துவிட்டது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x