Published : 17 May 2021 04:35 PM
Last Updated : 17 May 2021 04:35 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய அணியில் பெரும்பாலானோருக்குத் தெரிந்துதான் செய்யப்பட்டது என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.
2018்ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலிய அணியினர் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடினர். இதில் தென் ஆப்பிரிக்க அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பந்தில் உப்புக்காகிதம் கொண்டு தேய்த்து சேதப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் முயன்று சிக்கிக்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
பந்தைச் சேதப்படுத்த போடப்பட்ட திட்டம் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகிய 3 பேருக்கு மட்டும் தெரியும், மற்ற வீரர்களுக்குத் தெரியாது என்று விசாரணையில் மூவரும் தெரிவித்தனர்.
ஆனால், சமீபத்தில் ‘தி கார்டியன்’ நாளேட்டுக்கு பான்கிராப்ட் அளித்த பேட்டியில், “ பந்தைச் சேதப்படுத்த நாங்கள் தீட்டிய திட்டம் எங்கள் 3 பேருக்கு மேல் பலருக்கும் தெரியும். பந்தைச் சேதப்படுத்தினால் பலன் அடையப் போவது பந்துவீச்சாளர்கள்தானே. அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா” எனப் பெரிய உண்மையை உடைத்தார்.
இதனால் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் பெரும்பாலான வீரர்களுக்குத் தெரிந்துதான் நடந்துள்ளது என்பது தற்போது வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மிட்ஷெல் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், மிட்ஷெல் மார்ஷ், நாதன் லேயான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இப்போது இவர்கள் அனைவருக்குமே சிக்கல் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புதிய விசாரணைக் குழு அமைத்து மீண்டும் விசாரிக்க ஆஸ்திரேலிய ஒழுங்குமுறைக் குழு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''பான்கிராப்ட் அளித்த நேர்காணலைப் பார்த்தேன். உண்மையில் பான்கிராப்ட் கூறியதைப் படித்துப் பார்த்தால், பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் என்பது, 3 வீரர்களுக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார்.
இதில் என்ன வியப்பு இருக்கிறது. 3 வீரர்களுக்கு மேல் தெரிந்திருக்கக் கூடாதா? கிரிக்கெட் விளையாடுபவர்கள் கிரிக்கெட் பற்றியும், அதில் உள்ள சூட்சமங்கள் பற்றிச் சிறிதுகூடத் தெரியாமல் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. இதுபோன்ற உயர்ந்த தரத்திலான ஆட்டங்கள் நடக்கும்போது, நாம் வெற்றி பெறுவதற்கான கருவிகளில் பந்து முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கிரிக்கெட் விளையாடியிருந்தால் உண்மையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் 3 பேருக்கு மட்டும் தெரிந்து நடந்ததா அல்லது என்ன நடந்திருக்கும் என்பது தெரியவரும். பிரச்சினை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இருக்கிறது. பிரச்சினையை அப்படியே மூடி மறைக்கப் பார்த்தார்களே தவிர பிரச்சினை முழுவதையும் வெளியே கொண்டுவர முயலவில்லை''.
இவ்வாறு கிளார்க் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT