Published : 15 May 2021 07:31 PM
Last Updated : 15 May 2021 07:31 PM
தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்கிருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஷேன் பாண்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது இருந்து வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பு சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் பும்ரா, "நான் இங்கு இல்லையென்றாலும், இந்திய அணியுடன் விளையாடும்போது ஷேன் பாண்டோடு பேச முயல்வேன். இது ஒரு நல்ல பயணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவதைக் கற்று எனது பந்துவீச்சில் அதைச் சேர்க்க முயல்கிறேன். அதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இதுவரை எங்களுக்குள் சிறப்பான உறவு இருந்து வருகிறது. இன்னும் பல வருடங்கள் இது தொடரும் என்று நம்புகிறேன்.
நான் முதலில் அவரை 2015ஆம் ஆண்டு சந்தித்தேன். சிறுவயதில் அவரது பந்துவீச்சை, அவர் இயங்கும் விதத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறேன். அவரைச் சந்தித்துப் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவமாக இருந்தது. கிரிக்கெட் களத்தில் என்னால் முடியாத விஷயத்தை முயல, என் சிந்தனையைத் திறக்க அவர் உதவி செய்தார். எங்களுக்குள் இருக்கும் நட்பு ஒவ்வொரு ஆண்டும் மேம்பட்டு வருகிறது" என்று பும்ரா பேசியுள்ளார்.
உலகிலேயே ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பந்துவீசக்கூடிய சிறந்த வீரர் பும்ராதான் என்று பாண்ட் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT