Published : 23 Dec 2015 06:43 PM
Last Updated : 23 Dec 2015 06:43 PM

பரபரப்புக்கு பறக்கும் டிவி நிருபர்கள்: கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே விளாசல்

தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு ஒன்லைனர்களுக்காக அலைந்து திரிந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு இணங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் தொகுப்பாளர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இன்று டிவி நிருபர்களின் சில கேள்விகளில் கடும் எரிச்சலடைந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சற்று முன் திரும்பினேன். அதன் பிறகு நான் மனவருத்தத்தில் ஆழ்ந்தேன். அதாவது நான் தொந்தரவுக்குள்ளானேனா அல்லது விளையாட்டில் தொலைக்காட்சியின் பங்கை நான் புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.

நான் நிறைய இளம் தொலைக்காட்சி நிருபர்களைச் சந்தித்தேன், ஆனால் அவர்களின் எதிர்மறை போக்குகளினால் தூக்கி எறியப்பட்டேன். அவர்கள் கேட்ட கேள்வி அவ்வாறான எதிர்மறைத் தன்மையுடன் அமைந்ததே அதற்குக் காரணம்.

தோனி ஏன் இன்னும் கேப்டனாக இருக்கிறார்...

யுவராஜ், நெஹ்ரா இன்னும் ஆடமுடியுமா..

அதெப்படி ஆஸ்திரேலியாவில் இந்தியா தோற்றுக் கொண்டேயிருக்கிறது..

2015-ம் ஆண்டு, உலகக் கோப்பை ஏன் இந்திய அணிக்கு வீழ்ச்சி..

இப்படியாக எதிர்மறைக் கேள்விகளின் அணிவகுப்பு!

நான் அவர்களில் ஒருவரிடம் கேட்டேன், விராட் கோலியின் ஆஸ்திரேலிய ஆட்டம், அல்லது அஜிங்கிய ரஹானேயின் வளர்ச்சி (ரஹானே பற்றி கபில் புகழ்ந்து பேசியுள்ளார்), மணீஷ் பாண்டே அல்லது ஹர்திக் பாண்டியாவின் தேர்வு ஆகியவை பற்றி பேச விரும்புகிறீர்களா என்று. அதற்கு அவர், “இப்படி ஏதாவது ஒரு திட்டத்துடன் நான் சென்றால் எங்கள் எடிட்டர் என் மீது பாய்வார்” என்றார்.

இதிலிருந்து புரிவது என்னவெனில், அனைத்தும் சச்சரவாகவே இருக்க வேண்டும், குரல் ஆக்ரோஷமாகவும் வலியுறுத்துவதாகவும் இருக்க வேண்டும். அதாவது அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஆங்காங்கே ஓரிரு வரிகள் அதை வைத்துக் கொண்டு பரபரப்பாக்க வேண்டும்.

நான் இதனை எதிர்க்கவில்லை. ஆனால் தொழில் நேர்த்தியுடைய தொலைக்காட்சி நிருபர்களாக ஆக்ரோஷமான கருத்தாக இருந்தாலும் நடுநிலை தவறாமல் அளிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால் எதிர்மறை கருத்துகளில் மூழ்கி, கோபத்தினால் பீடிக்கப்படுவதன் மூலம் நாம் உண்மையற்றவர்களாகி விடுகிறோம்.

நான் விளையாட்டை மகிழ்ச்சியுடன் அணுகுபவன், ஆனால் அந்த உணர்வு எனக்கு மாலை நேர செய்தியில் வேலையைப் பெற்றுத்தராது என்று நான் அஞ்சுகிறேன்.

இவ்வாறு அவர் அந்த பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x