Published : 05 May 2021 05:00 PM
Last Updated : 05 May 2021 05:00 PM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி20 தொடர் நிறுத்தப்பட்டதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இலங்கை அல்லது மாலத்தீவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ நிர்வாகம் செய்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலிலும் பாதுகாப்பாக ஐபிஎல் டி20 போட்டி நடந்தது.
வீரர்களுக்குப் பல அடுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தனிைமைப்படுத்தப்பட்டு பயோ-பபுளில் தங்கவைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆனால், பயோ-பபுள் சூழலையும் மீறி கரோனா பாதிப்புக்கு வீரர்கள் அடுத்தடுத்து ஆளாகினர்.
இதனால், அடுத்தடுத்து இரு போட்டிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், பயோ-பபுளுக்குள் கரோனா வந்தபின் போட்டி நடத்துவது பாதுகாப்பில்லை என்பதால், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ் பரவலால் அச்சமடைந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிஸன், ''இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யாரும் வரும் 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்'' என உத்தரவிட்டார்.
இதனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல வீரர்கள் தாயகம் திரும்ப இந்தியாவிலிருந்து நேரடியாகச் செல்லாமல் மாலத்தீவு மற்றும் இலங்கை சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐபிஎல் வீரர்கள், பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என மொத்தம் 40 பேர் இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாக்ளி கூறுகையில், “இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்த ஆஸ்திரேலியக் குழுவினரையும் பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் இலங்கை சென்றோ அல்லது மாலத்தீவு சென்றோ அங்கிருந்து வேறு விமானம் மூலம் ஆஸ்திேரலியா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் செல்வதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கண்டிப்பாக 10 நாட்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டியிருப்பதால், அவர் ஆஸ்திரேலியா செல்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாட் க்ரீன்பெர்க் கூறுகையில், “கரோனாவால் மைக் ஹசி பாதிக்கப்பட்டாலும் அவருக்கு லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன. இருப்பினும் 10 நாட்களுக்குப் பின்புதான் நாடு திரும்ப முடியும். அவருக்குத் தேவையான ஆதரவை வீரர்கள் வழங்கி வருகிறார்கள். நாளை காலை முதல் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிய குழுவாகப் புறப்பட்டுச் செல்வார்கள். இரு பாதுகாப்பான விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் இந்தியாவை விட்டுப் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். 2-வது, பாதுகாப்பாக வீடு சென்று சேர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment