Last Updated : 04 May, 2021 11:09 AM

 

Published : 04 May 2021 11:09 AM
Last Updated : 04 May 2021 11:09 AM

ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் தனிமைப்படுத்தப்பட்டது: பாலாஜியின் தொற்றால் நாளை நடக்கும் சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் ரத்து

சிஎஸ்கே அணி | கோப்புப்படம்

புதுடெல்லி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

இதனால் நாளை நடக்கும் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நாளை நடக்க இருந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு ஆட்டங்களும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கவி்ல்லை.

பாலாஜியுடன் தோனி

ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் பல அடுக்கு கரோனா பரிசோதனை, அணியில் பிற ஊழியர்களுக்கும் அதே அளவு பலஅடுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்றவற்றை முடித்துதான் பயோ-பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயோ-பபுள் சூழலுக்குள் கரோனா வைரஸ் புகுந்துள்ளது ஐபிஎல் நிர்வாகத்துக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் மிகப்பெரிய அணியான சிஎஸ்கே அணி மோதும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது வர்த்தகரீதியாகவே பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

கடந்த மாதம் 21-ம் தேதி மும்பையில் ஒரே ஹோட்டலில்தான் சிஎஸ்கே அணியினரும், கொல்கத்தா அணியினரும் தங்கி இருந்தனர். தற்போது வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்

பிசிசிஐ நிலையான வழிகாட்டுதலின்படி, கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வீரர்கள் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், 3 முறை நடக்கும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “டெல்லியில் உள்ள அருண்ஜேட்லி மைதானத்தில்ல சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜியுடன் வீரர்கள் தொடர்பில் இருந்ததால், சிஎஸ்கே அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கடும் கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இனிமேல் சிஎஸ்கே வீரர்களுக்கு நாள்தோறும் கரோனா பரிசோதனை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் “ சிஎஸ்கே அணியின் பாலாஜி்க்கு கரோனா தொற்று இருப்பது குறித்து பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துவி்ட்டோம். பிசிசிஐ கரோனா தடுப்பு விதிகளின்படி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ், சன்ரைரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வழக்கம் போல் நடக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x