Published : 28 Apr 2021 04:34 PM
Last Updated : 28 Apr 2021 04:34 PM
ஐபிஎல் டி20 தொடரில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் குக்லிஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகி, நாள்தோறும் லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வருவோருக்குத் தடை விதித்தன. இந்தியப் பயணிகள் வரவும் தடை விதித்தன. ஆஸ்திரேலிய அரசும் மே 15-ம் தேதிவரை இந்திய விமானங்கள் வரத் தடை விதித்தது.
கரோனா வைரஸ் பிரச்சினையால், ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர் ஆடம் ஸம்ப்பா, வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினர். இருவரும் நேற்று இரவு ஆஸ்திரேலியா சென்று சேர்ந்தனர்.
இந்நிலையில் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் குக்லிஜன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று ஆர்சிபி அணி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் பயோ-பபுள் சூழலில் மும்பை இந்தியன்ஸ் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஸ்காட் குக்லிஜன் இடம் பெற்றிருந்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஆர்சிபி அணிக்கு ஸ்காட் குக்லிஜன் மாற்றப்பட்டார். ஆனால், ஆடம் ஸம்ப்பாவுக்கு மாற்றாக எந்த வெளிநாட்டு வீரரையும் ஆர்சிபி அணி இதுவரை சேர்க்கவில்லை.
29 வயதாகும் குக்லிஜன் நியூஸிலாந்து அணிக்காக 2 ஒருநாள் போட்டி, 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2019-ம் ஆண்டில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக சிஎஸ்கே அணிக்காகவும் ஆடியுள்ளார்.
ஆர்சிபி அணியில் வேகப்பந்துவீச்சு ஏற்கெனவே பலமாக இருக்கிறது, முகமது சிராஜ், ஹர்சல் படேல், ஜேமினஸ், டேனியல் சாம்ஸ், கிறிஸ்டியன் என இருக்கும் நிலையில் குக்லிஜன் இணைவது பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT