Published : 28 Apr 2021 02:15 PM
Last Updated : 28 Apr 2021 02:15 PM
எப்போதுமே நாங்கள் பேட்டிங்கில் வலுவான அணிதான். ஆனால், இப்போது பந்துவீச்சிலும் வலுவாக மாறிவிட்டோம் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்த சீசனில் கோலிப் படை பெறும் 5-வது வெற்றியாகும். இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த கோலி 6 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். போட்டியின் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
''இந்த சீசன் முழுவதும் எங்கள் பந்துவீச்சாளர்களால் நாங்கள் முதலிடத்தில்தான் இருந்திருக்கிறோம். 160 முதல் 165 ரன்கள் வரை நல்ல ஸ்கோராக்தான் எடுத்தோம். ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்தது.
ஆனால், இரவில் பனிப்பொழிவு இருக்கும் என நினைத்தோம். ஆனால், இல்லை. ஆட்டத்தின் இடையே வீசிய தூசிப் புயலால் ஆடுகளம் நன்றாகக் காய்ந்துவிட்டது. எங்களின் பந்துவீச்சு வரிசையைப் பார்த்தால், மேக்ஸ்வெல்லுக்கு இன்னும் நாங்கள் பந்துவீசும் வாய்ப்பு வழங்கவில்லை. என்னைப் பொறுத்தவரை மேக்ஸ்வெல்லை 7-வது பந்துவீச்சாளராகத் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
ஒரு கேப்டனாக நான் கூட சில நேரங்களில் பந்துவீச முடியும், மற்றவர்கள் மீதான அழுத்தத்தை நானும் பகிர்ந்து கொள்வேன். எங்களைப் பொறுத்தவரை இந்த சீசனில் எப்போதும் பேட்டிங்கில் வலுவாகத்தான் இருக்கிறோம். இப்போது பந்துவீச்சிலும் நாங்கள் வலுவாக மாறிவிட்டோம்” .
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், “இந்தத் தோல்வி என்னை வேதனைப்படுத்துகிறது. நாங்கள் 10 முதல் 15 ரன்களைக் கூடுதலாகப் பந்துவீச்சில் கோட்டைவிட்டுவிட்டோம் என நினைக்கிறேன். ஹெட்மெயர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலக்கிற்கு அருகே வந்து தோல்வியுற்றோம்.
கடைசி ஓவரை ஸ்டாய்னிஷ்க்கு கொடுத்ததன் காரணம், பந்துவீச்சில் அணிக்கு சரியான வேலை செய்து கொடுப்பார் என யோசித்தோம். சுழற்பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவரை வீசுவது சரியாகாது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவர்களை முடித்துவிட்டார்கள என்பதால், ஸ்டாய்னிஷ்க்கு வழங்கினோம்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT