Published : 14 Jun 2014 08:44 AM
Last Updated : 14 Jun 2014 08:44 AM
உலகக் கோப்பைக் கால்பந்து பிரிவு ஏ போட்டியில் கேமரூன் அணியை மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் பெரல்டா வெற்றிக்கான கோலை அடித்தார்.
இந்தப் போட்டியிலும் நடுவர்களின் தவறுகள் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் இது 1-0 என்று இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மெக்சிகோ வீரர் கியோவானி டாஸ் சாண்டோஸ் அடித்த 2 கோல்களையும் நடுவர் தவறாக ஆஃப் சைடு என்று தீர்ப்பளித்தது மெக்சிகோ வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கியோவானி டாஸ் சாண்டோஸ், ஹெக்டார் ஹெராரா அடித்த பாஸை கோலாக மாற்றினார். ஆனால் கொலம்பிய நடுவரான வில்மர் ரோல்டான் அதனை ஆஃப் சைடு என்று தீர்ப்பளித்து கோலை மறுத்தார்.
பிறகு ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் மெக்சிகோவின் மிகெல் லாயுன் அடித்த கார்னர் ஷாட்டை கியோவானி டாஸ் சாண்டோஸ் தலையால் முட்டி கோல் அடித்தார் அதையும் நடுவர் ஆஃப் சைடு என்று மறுத்தார்.
இதற்கிடையே கேமரூன் கேப்டன் சாமுயெல் ஈட்டோ அடித்த கோலும் ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை நடுவர் தவறு செய்யவில்லை.
இடைவேளையின் போது இந்த சர்ச்சைகளுக்கு நடுவே இரு அணிகளும் 0-0 என்று இருந்தது.
இடைவேளைக்குப் பிறகே பெரால்டா ஒரு கோலை அடித்தார். மீண்டும் டாஸ் சாண்டோஸ் கொடுத்த அருமையான பாஸை பெரால்டா கோலாக மாற்றினார்.
பிறகு இரு அணிகளும் நிறைய ஃபவுல்கள் செய்தன. ஆனால் நடுவர்கள் கண்டு கொள்ளாமல் போட்டியை நடத்திச் சென்றனர்.
90 நிமிடங்கள் கழித்து காயத்திற்காக நிறுத்தப்பட்ட ஆட்டத்தை ஈடு செய்யும் நேரத்தில் கேமரூன் வீரர் பெஞ்சமின் மவுகாஞ்ஜோ தலையால் முட்டி கோலை நோக்கி அடிக்க அதனை மெக்சிகோவின் கில்லர்மோ ஓகோவா அருமையாகத் தடுத்தார்.
வரும் செவ்வாய்க்கிழமை பிரேசிலைச் சந்திக்கிறது மெக்சிகோ, அடுத்த நாள் கேமரூன் அணி குரேஷியாவைச் சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT