Published : 26 Apr 2021 03:01 PM
Last Updated : 26 Apr 2021 03:01 PM
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். அதிகரித்து வரும் கரோனா அச்சம் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். தனது குடும்பத்தினர் கரோனா அச்சத்தில் இருப்பதால், அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதேபோல ராஜஸ்தான் அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் கரோனா அச்சம், பயோ-பபுள் சூழல் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர்.
ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா, கானே ரிச்சார்ட்ஸன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் வெளியேறுவதாகத் தெரிவித்தாலும் இந்தியாவில் நிலவும் கரோனா வைரஸ் அச்சம்தான் காரணம் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பாதியிலேயே வெளியேறுவதால் தொடர் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்தது.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் டி20 தொடர் வழக்கும் போல் நடக்கும். எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெறும். கரோனா அச்சம் காரணமாக வெளியேற விரும்பும் வீரர்கள் தாரளமாக வெளியேறட்டும். தடையில்லை” எனத் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசி, சிட்னி ஹெரால்ட் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப முடியுமா என ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரும் பதற்றத்துடன், அச்சத்துடன் இருக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் செல்வதில் சில வீரர்கள் இன்னும் சற்று பதற்றத்துடனே இருக்கிறார்கள் எனத் துணிச்சலாகக் கூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும், பயோ-பபுள் சூழலை விட்டு வெளியேறக் கூடாது எனத் தெரிவித்துள்ளோம்.
ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி, இந்தியாவில் உள்ள கள நிலவரம் குறித்தும் தொடர்ந்து கேட்டறிவோம். இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT