Published : 09 Dec 2015 07:51 PM
Last Updated : 09 Dec 2015 07:51 PM

பல டெஸ்ட் சாதனைகளை உடைக்க ஆஸி. திட்டம்; வீழ்த்துவோம் என்கிறார் கர்ட்லி ஆம்புரோஸ்

ஹோபார்ட்டில் நாளை (வியாழன்) ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

மே.இ.தீவுகள் அணி தற்போதுள்ள நிலையில் டிரா செய்தால் அதுவே பெரிய சாதனை என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பந்துவீச்சு ஆலோசகருமான கர்ட்லி ஆம்புரோஸ்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிக்கு முன்னதான டூர் கேமில் மே.இ.தீவுகள் படுமோசமாகத் தோல்வியடைந்ததையடுத்து இந்தத் தொடரில் மே.இ.தீவுகள் நசுக்கப்படுவதோடு, ஆஸ்திரேலியா சிலபல டெஸ்ட் சாதனைகளை உடைக்கும் என்ற பேச்சு ஊடகங்களில் எழுந்துள்ளது.

இந்தத் தொடரில் ‘பலவீனமான’ மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சில டெஸ்ட் உலக சாதனைகளை உடைக்க ஆஸ்திரேலியா தயாராகிவரும் நிலையில் ஆம்புரோஸ் கூறியிருப்பதாவது:

நாங்கள் நல்ல அணியல்ல, எங்களால் சவால் அளிக்க முடியாது என்றெல்லாம் பேசுபவர்கள் பேசட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. ஆனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்றால் செய்தியாளர்கள் தங்கள் பார்வையை மாற்றிக் கொள்வார்கள்.

இதற்கு முந்தைய தொடரை நாங்கள் 2-0 என்று இழந்திருந்தாலும், அந்தத் தொடரில் ஒரு சில கணங்கள் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தினோம். எனவே நாங்கள் சவால் அளிக்க முடியும், சவால் மட்டுமல்ல நாங்கள் அவர்களை வீழ்த்த முடியும். எங்கள் கவனம் முழுதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதே. தோல்வியடையும் அணி என்ற ஒரு பெயர் சில வேளைகளில் அணிக்கு சாதகமாக திரும்பும் வாய்ப்பு உள்ளது.

எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, எனவே ஆஸ்திரேலியர்களுக்குத்தான் நெருக்கடி. நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தப் போவது உறுதி.

நாங்கள் வீரர்கள் சந்திப்பில் இது பற்றி பேசியுள்ளோம். அண்டர்-19 அணிக்கு எதிராக தடுமாறினால் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப்போவது எப்படி? என்பது பற்றி நாங்கள் வலுவாக அணி வீரர்களிடம் எச்சரித்துள்ளோம்.

யார் அணியை பற்றி எது கூறியிருந்தாலும் அது எங்களது கவனத்தை சிதறடிக்காது. அணியைப் பற்றிய மோசமான கருத்துக்கள் அணி வீரர்களை நன்றாக விளையாட உற்சாகமூட்டும். விமர்சகர்கள் தவறு என்பதை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீங்கள் நினைப்பதை விட சிறப்பாகவே ஆடப்போகிறோம்.

இவ்வாறு கூறினார் கர்ட்லி ஆம்புரோஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x