Published : 26 Apr 2021 11:32 AM
Last Updated : 26 Apr 2021 11:32 AM
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வீரர்கள் பலர் விலகி வருகின்றனர். ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை ஆகியோரும் விலகியுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தனது குடும்பத்தினர் கரோனா வைரஸ் பாதிப்பின் அச்சத்தில் இருப்பதால், தொடரிலிருந்து விலகுவதாக நேற்று அறிவி்த்தார்.
இதில் ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா நிலவரத்தைப் பார்த்து பல வீரர்கள் விலகியுள்ள நிலையில் இன்னும் ஒரு சுற்றுப்போட்டிகள், ப்ளேஆஃப், எலிமினேட்டர் சுற்று, இறுதிப்போட்டி இருக்கிறது.
ஆர்சிபி அணி வெளியிட்ட அறிவிப்பில், “ ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் தங்களின் தாய்நாடு செல்வதால், மீதமுள்ள ஐபிஎல் சீசனிலும் அவர்கள் விளையாடமாட்டார்கள்.
அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ஆர்சிபி அணி வழங்கும்:” எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆடம் ஸம்பா ரூ.1.50 கோடிக்கும், ரிச்சார்டஸனை ரூ.4 கோடிக்கும் ஏலத்தில்ஆர்சிபி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை ஐபிஎல் டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டார். கரோனா வைரஸ் அச்சத்தால் தங்கள் நாட்டில் லாக்டவுன் போடப்பட்டுவிடலாம் என்ற அச்சத்தால் ஆன்ட்ரூ டை விலகியுள்ளார்.
இது தொடர்பாக ஆன்ட்ரூ டை கூறுகையில் “ இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் உள்ள என்னுடைய சொந்த மாநிலமான பெர்த் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே சூழல் நீடித்தால் இந்தியாவிலிருந்து வருவதற்கு கூட தடை விதிக்கலாம். இது தவிரத்து பயோ-பபுள் சூழல் கடினமாக இருக்கிறது. என்னுடைய நாடும் இந்தியாவிலிருந்து வருவோருக்கு தடைவிதிக்கும் முன் நான் புறப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை ஏலத்தில் ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...