Published : 26 Apr 2021 07:07 AM
Last Updated : 26 Apr 2021 07:07 AM
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திர அஸ்வின் திடீரென விலகியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் பெரிதாக விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. நல்ல ஃபார்மில் அஸ்வின் இருந்தபோதிலும், சிறந்த ப பந்துவீச்சை வெளிப்படுத்தியபோதிலும் விக்கெட் மட்டும் வீழ்த்த முடியாமல் அஸ்வின் தடுமாறினார்.
இதற்கிடையே கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் ஆட்டம் முடிந்து அடுத்ததாக டெல்லி மற்றும் அகமதாபாத் நகருக்கு அணிகள் செல்கின்றன. சென்னையிலும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் குடியிருக்கும் அஸ்வின் தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அஸ்வின் பதிவிட்ட கருத்தில் “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் . நன்றி டெல்லி கேபிடல்ஸ்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் 4-வது வீரர் அஸ்வின். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகினார், பயோ-பபுள் சூழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் விலகினார், ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டையும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT