Last Updated : 25 Apr, 2021 09:09 PM

2  

Published : 25 Apr 2021 09:09 PM
Last Updated : 25 Apr 2021 09:09 PM

வான்ஹடே 'ராஜா ஜடேஜா': சிஎஸ்கே கொடி பறக்குது: வெற்றியுடன் தொடங்கி தோல்வியுடன் முடித்த கோலி படை 

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு நாயாகனாக இருந்த ரவிந்திர ஜடேஜா | படம் உதவி ட்விட்டர்

மும்பை

ஜடேஜாவின் 'பேட்டிங்', ஜடேஜாவின்'பந்துவீச்சு', ஜடேஜாவின் 'பீல்டிங்' ஆகியவற்றால் மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என எல்லாவற்றிலும் ஜடேஜாவின் பெயரைக் சொல்கிறோமா… ஆமாம்.. சிஎஸ்கேவின் வெற்றிக்கு முழுக்கக் காரணமே ஜடேஜாதான். இன்று ஜடேஜாவின் நாள். ஆர்சிபிக்கும் சிஎஸ்கேவுக்கும் நடந்த போட்டிஅல்ல, ஜடேஜாவுக்கும், ஆர்சிபிக்கும் நடந்த போட்டியாக மாறிவிட்டது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி மீண்டும் வின்டேஜ் சிஎஸ்கே அணியாக ஃபார்முக்கு வந்துள்ளது. அதாங்க.. புள்ளிப்பட்டியலில் கடந்த காலம்போல், முதலிடத்தை சிஎஸ்கே பிடித்துள்ளது.

5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே உள்ளது. வெற்றியுடன் பயணித்த ஆர்சிபி அணி 5 போட்டிகளி்ல 4 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் சுற்றை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி அணி, முதல்சுற்றை தோல்வியுடன் முடித்துள்ளது. அதேசமயம், முதல் சுற்றை தோல்வியுடன் தொடங்கி, வெற்றியுடன் தோனிபடை முடித்துள்ளது.

சிஎஸ்கேயின் வெற்றிக்கு முக்கியக் காரணமே மூன்றெழுத்து மந்திரம்தான்… அதுதான் ஜடேஜா. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் சிஎஸ்கேவை உச்சத்துக்கு கொண்டுவந்து, எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்துவிட்டார்.

ஆட்டநாயகன் விருது யாருக்கு கொடுக்க முடியும்… வேறு யாரு ஜடேஜாதான்…

28 பந்துகளில் 62 ரன்கள்(5சிக்ஸர்,4பவுண்டரி) சேர்த்தும், பந்துவீச்சில்4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 3 விக்கெட்(15டாட்பந்துகள்) வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டில் ஆங்கிலத்தில் ஒரு சொலவடை இருக்கிறது "ட்ராப் கேட்ச் லாஸ் மேட்ச்"(Drop catch lost match) என்பார்கள்.அதுபோல் ஜடேஜா ரன்ஏதும் சேர்க்காமல் இருக்கும்போது ஆர்சிபி வீரர் கிறிஸ்டியன் கையில் விளக்கெண்ணெயை தடவிக்கொண்டு நழுவவிட்ட கேட்ச்சுக்கு சரியான விலை கொடுத்துவி்ட்டது. இந்த கேட்ச்சை மட்டும் கிறிஸ்டியன் பிடித்திருந்தால், ஆட்டம் வேறு மாதிரி போயிருந்திருக்கும் சிஎஸ்கே அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

பாவம் ஹர்ஸல் படேல்

பாவம்…! ஹர்ஸல் படேல் தனது 4-வது ஓவரை ஜடேஜாவுக்கு வீச வரும்முன் 3 ஓவர்களில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்லாத்தாங்க இருந்தார். கடைசி ஓவரில் ஜடேஜா அடித்த அடியை ஹர்ஸல் படேல் வாழ்க்கையில் மறக்கமாட்டார்.

14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த ஹர்சல் படேல் கடைசி ஓவரை முடிக்கும் போது 51 ரன்கள் கொடுத்துவிட்டார். ஜடேஜா அரைசதம் அடித்தாரோ இல்லையோ, ஆனால், ஹர்சல் படேல் அரைசதம் அடித்துவிட்டார்.

ஹர்சல் படேல் ஓவரை ஜடேஜா வெளுத்துவாங்கியதைப் பார்த்த கேப்டன் கோலியின் முகத்தில் கோபம், வெறுப்பு, கடுப்பு, விரக்தி கொப்பளித்தது.

ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 5 சிக்ஸர்கள்,ஒருபவுண்டரி என மொத்தம் 37 ரன்கள் சேர்த்து ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.

2-வது முறை

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் இரண்டாவது முறையாக அடிக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த 2011ல், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 37 ரன்கள் சேர்த்தது. அதன்பின் இப்போது ஆர்சிபி அணி்க்கு எதிராக சிஎஸ்கே சேர்த்துள்ளது. ஆனால், டி20 வரலாற்றில் 4-வது முறையாக 37 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

டி20 வரலாற்றிலேயே ஒரே ஓவரில் 36 ரன்கள் சேர்த்த 7-வது பேட்ஸ்மேன் ஜடேஜா என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், ரோஸ் வொய்ட்லே, கெய்ரன் பொலார்ட், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், லியோ கார்ட்டர் ஆகியோர் அடித்துள்ளனர்.

பந்துவீச்சிலும் ரவிந்திர ஜடேஜா பட்டையக் கிளப்பிவிட்டார். ரவிந்திர ஜடேஜா பந்துவீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் மேக்ஸ்வெல், டிவி்ல்லியர்ஸ் என இரு அபாயகரமான பேட்ஸ்மேன்களை தனது துல்லியமான சுழற்பந்துவீச்சால் பெவிலியன் அனுப்பினார்.

டிவில்லியர்ஸ் அவுட்

அதிலும் கடந்த 2009ம் ஆண்டுக்குப்பின், ஐபிஎல் தொடரில் ஸ்லோ லெப்ட்ஆர்ம் (எஸ்எல்ஏ) பந்துவீச்சாளரிடம் டிவில்லியர்ஸ் விக்கெட்டை இழந்தது இல்லை. கடைசியாக 2009 ஐபிஎல் தொடரில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ரியோல்ப் வேன் டர் மெர்விடம் டிவில்யர்ஸ் விக்கெட்டை இழந்தார் அதன்பின் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகினார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், சிஎஸ்கே அணியின் வரலாற்றிலேயே, ஒரு போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்து, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஜடேஜாதான். ஐபிஎல் வரலாற்றில் 13-வது வீரர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஜடேஜாவைப் பற்றி ஒன்று சொல்லி முடித்துவிடலாம்…பேட்டிங், பந்துவீச்சி்ல் மட்டும் அசத்தவி்ல்லை பீல்டிங்கிலும் பட்டைய களப்பிய ஜடேஜா பிரமாதமான ரன்அவுட் செய்தார். கிறிஸ்டியனுக்கு சரியான ரன்அவுட் செய்து சர்வதேச தரத்திலான பீல்டர் என்பதை நிரூபித்தார்.

ஒரு போட்டியை எந்த நேரத்திலும் திசைதிருப்பக்கூடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா என்பதால்தான் இந்திய அணியில் இவரின் இடத்தை நிரப்பமுடியாமல் தவிக்கிறார்கள். குர்னல் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் வந்தாலும் ஜடேஜாவின் வெற்றிடம் வெற்றிடம்தான்…

"அதாவது தல தோனியின் இடத்தைப்போல், நம்பர் 7 போல் யாராலும் முடியாது."

பராசக்தி எக்ஸ்பிரஸ்

இந்த ஆட்டத்தில் மற்றொரு வீரரின் பங்களிப்பையும் சொல்லியாக வேண்டும். அவர்தான் நமது பராசக்தி எக்ஸ்பிரஸ். கடந்த ஐபிஎல் சீசனில் களமிறங்காத இம்ரான் தாஹிர் முதல்முறையாக இந்த போட்டியில் வாய்ப்புப் பெற்றார். முதல் போட்டியிலேயே 4 ஓவர்கள் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கே உரிய “எக்ஸ்பிரஷனை” வெளிப்படுத்தினார்(நல்லவேளை மைதானத்தில் ரசிகர்கள் இல்லாததால் சுற்றிவரவில்லை).

ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபியின் முதுகெலும்பை உடைத்தனர். இருவரும சேர்ந்து 5 விக்கெட் அதற்குமேல் வீழ்த்துவது 2-வது முறை. இதற்கு முன் இருவரும் சேர்ந்து 2019ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஜடேஜா 3விக்கெட்டுகளையும், தாஹிர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஜடேஜாவைப் போல் இம்ரான் தாஹிரும் அற்புதமான ரன்அவுட் செய்தார். 40 வயதுக்கு மேல்ஆகியும் மனுஷன்… என்னமா பந்தை குறிபார்த்து அடிக்கிறார். ஜேமிஸனை ரன்அவுட் செய்து இம்ரான் தாஹிர் ஆர்சிபியை நெருக்கடியில் தள்ளினார்.

டூப்பிளசிஸ் பங்களிப்பு

இவ்வளவு எழுதிவிட்டு, டூப்பிளசிஸ் பங்களிப்பை சொல்லாமல் இருக்க முடியாது. தொடக்க வீரராகக் களமிறங்கி சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றாமல் பங்களிப்பைச் செய்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் அரைசதம் அடித்த டூப்பிளசிஸ் 50ரன்களில் ஆட்டமிழந்தார்.

டூப்பிளசிஸ் பற்றி ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். கடந்த 2019ம் ஆண்டுஐபிஎல் தொடரிலிருந்து, அதிகமான அரைசதங்களை 4 வீரர்கள் மட்டுமே அடித்துள்ளனர். அதில் டூப்பிளசிஸ் 9 அரைசதங்களை அடித்துள்ளார். அடுத்ததாக ஷிகர் தவண், கே.எல்.ராகுல், டேவிட் வார்னர் ஆகியோரும் 9 அரைசதங்களை அடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி… என்று சொல்வதைவிட ஜடேஜாவுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிடலாம்.

இதில் முக்கியமான விஷயம் தோனி 6-வது வீரராக களமிறங்கி ஏதும் பேட்டிங்கில் பெரிதாக பங்களிப்பு ஏதும் செய்யப்போவதில்லை. அதற்குரிய ஃபார்மிலும் இல்லை. கேப்டன்ஷிப்பை மட்டும் சிறப்பாகச் செய்து சாம் கரன், பிராவோ, தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளித்து, 9 அல்லது 10-வது வீரராகக் களமிறங்குவது பற்றி யோசிக்கலாம். இப்படி மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையான் லாரா கூறியுள்ளதை நினைவூட்டுகிறோம்.

192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கு நிர்ணயி்க்கப்பட்டபோதே, கோலிக்கு வியர்த்திருக்கும். அழுதத்ததுடன் படிக்கல், கோலி களமிறங்கினர். இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.

தோனியின் நுட்பம்

ஆனால், இடதுகை வேகப்பந்துவீ்ச்சில் கோலி “வீக்” என்பதை தெரிந்து கொண்ட தோனி, சாம்கரனை பந்துவீசச் செய்து, 8 ரன்னில் கோலியை வெளியேற்றினார்.அதிரடியா பேட் செய்த படிக்கல் 34 ரன்னில் தாக்கூரின் ஸ்விங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்தது.

ஜடேஜா, தாஹிர் ஆட்டம்

அதன்பின் ஆர்சிபியின் சரிவு தொடங்கியது. நடுவரியில் களமிறங்கிய வீரர்கள், பின்வரிசையில் வந்த வீரர்கள் யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி, அடுத்த 34 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சுந்தர்(7) ,மேக்ஸ்வெல்(22), டிவில்லியர்ஸ்(4), கிறிஸ்டியன்(1), ஜேமிஸன்(16), படேல்(0), ஷைனி(2) என சீரான இடைவெளியில் விக்ெகட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணி 122 ரன்கள் சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், தாஹிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நல்ல அடித்தளம்

முன்னதாக சிஎஸ்கே தரப்பில் கெய்க்வாட், டூப்பிளசிஸ் நல்ல அடித்தளம் அமைத்தனர். கெய்க்வாட்(33) ரன்னில் ஆட்டமிழந்தா். 3 சிக்ஸர்கள் விளாசியரெய்னா 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்பாக ஆடிய டூப்பிளசிஸ் 41 பந்துகளி்ல 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தை திருப்பிய ஜடேஜா

ஜடேஜா பற்றி சொல்லத்தேவையில்லை, 25 பந்துகளி்ல அரைசதம் அடித்த ஜடேஜா, 28 பந்துகளில் 62ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதில் 5 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். தோனி 2 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x