Published : 25 Apr 2021 03:50 PM
Last Updated : 25 Apr 2021 03:50 PM
இந்தியப் பயணத்தின்போது நீண்டகாலம் பயோ-பபுள் சூழலி்ல் இருந்துவிட்டுச் சென்றபின்புதான் நான் கிரிக்கெட்டை வெறுக்கத் தொடங்கினேன் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டாம் பெஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்த அணியில் டாம் பெஸ் இடம் பெற்றிருந்தார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய டாம் பெஸ் 5 வி்க்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி எந்தவிக்கெட்டையும் வீழ்த்தவில்லை.
ஏறக்குறைய 7 வாரங்கள் இங்கிலாந்து அணியில் பயோ-பபுள் சூழலில் இருந்துவிட்டு, அதன்பின் இங்கிலாந்து சென்ற டாம் பெஸ் தற்போது கவுன்டி கிரிக்கெட் போட்டியில் யார்க்ஸையர் அணியில் விளையாடி வருகிறார்.
கிரிக்இன்போ தளத்துக்கு டாம் பெஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியப் பயணத்தை முடித்துவிட்டு நான் இங்கிலாந்து திரும்பியபின் நான் கிரிக்கெட்டை வெறுக்கத் தொடங்கினேன். ஒருநாளில் பெரும்பகுதி நேரம் பயோ-பபுள் சூழலில் இருக்க வேண்டியது இருந்தது. மனதளவில் ஏராளமான அழுத்தம், அதிலிருந்து விடுபட்டு நான் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது எனக்கு முக்கியமாகத் தெரிந்தது.
இந்தியாவிலிருந்து வந்தபின் நான் 3 வாரங்கள் என் குடும்பத்தாருடன் செலவிட்டேன். என் காதலியுடனும், நான் வளர்க்கும் நாயுடன் பொழுதைக் கழித்தேன். நீண்ட நாட்களுக்குப்பின் அவர்களை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது.
இந்தியாவில் பயோ-பபுள் சூழலில் இருந்தபோது, அனைத்துமே கிரிக்கெட்டாக இருந்தது. கிரிக்கெட் தவிர்த்து வேறு ஏதும் நினைக்க முடியாது . நான் அந்த பயோ-பபுளை அனுசரித்துச் சென்றால், அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால், அது கடினமானதாக மாறிவிடும்.
இந்தியாவில் இருந்த காலத்தை நான் நேர்மறையாகவே பார்த்தேன். உண்மையில் கடினமாக காலமாக இருந்தாலும், கற்றுக்கொள்ள ஏராளமாகஇருந்தது. என்னுடைய விளையாட்டில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இவ்வாறு பெஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT