Published : 24 Apr 2021 07:05 AM
Last Updated : 24 Apr 2021 07:05 AM
கே.எல்.ராகுல், கிறிஸ்கெயிலின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் பஞ்சாப் அணி.
சென்னையிலிருந்து விடுதலை
ஒருவழியாக இரு அணிகளுக்கும் தரமற்ற சென்னை ஆடுகளத்தில் ஆட்டம் முடிந்துள்ளதே மிகப்பெரிய நம்மதியாக இருக்கும். ஆடுகளமாக இது..... பேட்ஸ்மேன்களுக்கும் ஒத்துவராது, பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துவராது. இதுபோன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் போட்டி விளையாடுவதே கடினமாக இருக்கிறது, இதில் உலகக் கோப்பைப் போட்டிக்கு நடத்தவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.
சென்னை ஆடுகளத்தில் விளையாடிவிட்டால், எந்த ஆடுகளத்திலும் விளையாடிவிடலாம், பேட்ஸ்மேன்களின் நம்பிக்கை அதிகரித்துவிடும் என்று ஷிகர் தவண் தெரிவித்திருந்தார். என்ன அர்த்தத்தில் தெரிவித்தாரோ தெரியவில்லை..
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரந்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கிங்ஸ் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. மும்பைஇந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 2-வது போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் 2019ல் மொஹாலியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியிருந்தது பஞ்சாப் அணி.
வெற்றிக்குக் காரணம்
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களும், கெயில், ராகுல் கூட்டணியும்தான் காரணம்.
பஞ்சாப் அணியின் வெற்றிக்காகத் தீர்மானத்துடன் ஆடிய கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 60 ரன்களுடன்(3பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த போட்டிகளில் சொதப்பலாக ஆடி வந்த கெயில்(43) இந்த போட்டியில் மிகவும் நிதானமாக ஆடி, கடைசியில் தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பினார்.
கே.எல்.ராகுலைப் பொறுத்தவரை பேட்ஸ்மேனாக அவரின் ஸ்ட்ரைக் ரேட் மோசமானதாக இருந்தாலும், கேப்டனாக அவரின் ஆட்டத்தை ஏற்கலாம். அரைசதம் அடிக்க 50 பந்துகளை ராகுல் எடுத்துக்கொண்டது, அவரின் ஐபிஎல் வரலாற்றில் மந்தமான அரைசதமாகும்.
கடந்த சில போட்டிகளாகவே ராகுலின் ஸ்ட்ரேக் ரேட் மீது பலத்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அதை அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.
கிங்ஸ் பஞ்சாப் அணிக்காக 22-வது அரைசதத்தை கே.எல்.ராகுல் பதிவு செய்துள்ளார். இதற்கு முன் பஞ்சாப் அணிக்காக ஷான் மார்ஷ் 21 அரைசதங்கள் அடித்த நிலையில் அதை ராகுல் முறியடித்தார்.
மாற்றம் ஏற்றம்
பஞ்சாப் அணி, பலமாற்றங்களை அணிக்குள் செய்தது. குறிப்பாக முருகன் அஸ்வினுக்கு பதிலாக ரவி பிஸ்னோய், பேபியன் ஆலன் ஆகியவை எடுத்திருந்தது.அந்த மாற்றத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. ரவி பிஸ்னோயை கடந்த போட்டியிலியே அணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். கடந்த சீசனில் பஞ்சாப் அணியை திரும்பிப்பார்க்க வைத்த பந்துவீ்ச்சாளர்களில் ரவி பிஸ்னோய் ஒருவர். சிறப்பாக பந்துவீசிய பிஸ்னோய் 21 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால், நிச்சயமாக அடுத்துவரும் போட்டிகளுக்கு இடம் கிடைக்கும்.
ஷமி அபாரம்
முகமது ஷமி "டாப் கிளாஸ்" பந்துவீச்சை நேற்று வெளிப்படுத்தினார். கடந்த ஆட்டத்தில் தனது பந்துவீச்சை அடித்து நொறுக்கியதால் என்னமோ இந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு தண்ணி காட்டினார். பந்துவீச்சில் ஏகப்பட்ட “வேரியேஷன்” ஸ்லோபால், திடீர் யார்கர், ஸ்விங், ஸ்மீங் என மும்பை பேட்ஸ்மேன்களை திணறவிட்டாார். 4 ஓவர்களை வீசிய ஷமி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்,இதில் 7 டாட்பந்துகள், ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கவிட்டார்.
தீபக் ஹூடா, அர்ஸ்தீப்சிங், ஹென்ரி்க்ஸ் என 3 பந்துவீச்சாளர்களுமே ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீசி மும்பை அணியைக் கட்டுப்படுத்தினர். கடைசி 5 ஓவர்களில் மும்பை அணியை 34 ரன்கள் அடிக்கவிட்டு 4 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி எடுத்ததற்கு பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்புதான் காரணம். அடுத்துவரும் போட்டிகள் ஸ்வாரஸ்யமாகச் செல்வதற்கு இந்த வெற்றி கிங்ஸ் பஞ்சாப் அணிக்கு அவசியமானது.
அசைப்படலாமா
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை 131 ரன்களை அடித்துகொண்டு வெற்றி பெறலாம் என்றெல்லாம் ஆசைப்படலாமா. மும்பை அணி தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்திக்கிறது. மும்பை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமே அணியில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய கேப்டன் ரோஹித் சர்மா முன்வராதததுதான்.
மாற்றம் தேவை
ஃபார்மில் இல்லாத டீகாக், சுழற்பந்துவீசத் தெரியாத குர்னல் பாண்டியா, பந்துவீச உடற்தகுதியில்லாத, பேட்டிங் ஃபார்ம் இல்லாத ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோரை மாற்றிவிட்டு பெஞ்சில் அமரைவக்கப்பட்டிருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
நேர்மையாகக் கூறினால், கடந்த 5 போட்டிகளாக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை நம்பி களமிறங்கியதைவிட, பும்ரா, போல்ட், ராகுல் சஹர், பொலார்ட் ஆகிய நால்வரையும் நம்பி்த்தான் களமிறங்கியது. ஏனென்றால், பேட்டிங்கில் ரோஹித்சர்மா, சூர்யகுமார் யாதவைத் தவிர்த்து வேறு எந்த வீரரும் குறிப்பிட்ட பங்களிப்பை செய்யவில்லை என்பதை நிதர்சனம்.
அதிலும் நடப்பு சாம்பியன், தொடர்ந்து 2முறை பட்டம் வென்ற மும்பை அணி கடந்த 5 போட்டிகளிலும் அணியின் நடுவரிசை பேட்ஸேமேன்கள் திணறும்போது உடனடியாக அதற்கு மாற்று தேடியிருக்க வேண்டும். ஜேம்ஸ் நீஷம், சவுரவ் திவாரி போன்றோர்களை களமிறங்கியிருக்கலாம்.
குர்னல் பாண்டியாவையெல்லாம் சுழற்பந்துவீச்சாளர் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. இவருக்குப்பபதிலாக அனுபவம் மிகுந்த பியூஷ் சாவ்லாவை களமிறக்கியிருக்கலாம். அணியின் வெற்றிக்காகத்தான் ரோஹித் சர்மா விளையாட வேண்டுமே, வீரர்களின் முகத்துக்காகவும், நட்புக்காகவும் செயல்பட்டால், மும்பை இந்தியன்ஸ் நடப்பு சாம்பியன் பட்டத்தை இழந்துவிடும்.
நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, இஷன்கிஷன் போன்றவர்களிடம் கடந்த சில போட்டிகளாகவே ஒரு விதமான அசட்டத்தனம் பேட்டிங்கில் தென்படுகிறது. அதனால்தான் அணியின் சூழல், ரன் சேர்ப்பு, வெற்றி என எதைப்பற்றியும் கருதாமல் வந்தவுடன் ஷாட்களை அடித்துவிட்டு ஆட்டமிழந்து சென்றனர்.
பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம்
131 ரன்களை அடித்துவிட்டு அதற்குள் பஞ்சாப் அணியை சுருட்ட வேண்டும் என்று பந்துவீச்சாளர்கள் மீது ரோஹித் சர்மா அழுதத்தை அதிகரிப்பதும் நியாயமல்ல. பேட்ஸ்மேன்கள் இன்னும் பொறுப்புடன் ஆடி கூடுதலாக 30 முதல் 40 ரன்களை அடித்திருந்தால் பந்துவீச்சாளர்கள் தங்களின் சிறப்பானவற்றை வெளிப்படுத்துவார்கள். மும்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் அமைத்த பாட்னர்ஷிப்தான் அதிகபட்சம். மற்ற எந்த வீரர்களும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.
ரோஹித் சர்மா 63, சூர்யகுமார் 33 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர். கடைசி 5 ஓவர்களில் மிகவும் முக்கியானது, ஆனால், 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்துக்கு கிடைத்த தோல்வி. அணியில் மாற்றம் செய்யாதவரை இந்த தோல்வி தொடரும். குறிப்பாக டீகாக், குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியாவுக்கு டெல்லியில் நடக்கும் போட்டிகளில், பெஞ்சில் அமரவைக்க வேண்டும்.
அகர்வால் அதிரடி
132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராகுல், அகர்வால் கூட்டணி களமிறங்கியது. ராகுல் நிதானமாக ஆட அகர்வால் அதிரடியில் இறங்கினார், ரும் மோசமான பந்துகளை தேர்வு செய்து பவுண்டரி, சிக்ஸர் அடித்ததால் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி.
முதல் விக்ெகட்டுக்கு 53 ரன்கள் ரன்கள் சேர்த்த நிலையில் இந்தக் கூட்டணி பிரிந்தது. அகர்வால் 25 ரன்னில் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பொறுப்புக்கூட்டணி
2-வது விக்கெட்டுக்கு வந்த கெயில், ராகுலுடன் சேர்ந்தார். மந்தமாகவே கெயில் தனது ஆட்டத்தைத் தொடங்கினார், 11 பந்துகளில் 3 ரன்கள் என் நிலையில்தான் கெயில் இருந்தார். ஆனால், தனக்கான பந்துகளை எதிர்பார்த்துக் காத்திருந்த கெயில் அதற்கான “மொமன்ட்டம்” கிடைத்தவுடன் சாத்தினார்.
ராகுல், கெயில் இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கொடுக்காமல் பேட் செய்து அவர்களை திணறவிட்டனர். ரோஹித் சர்மாவும் பல பந்துவீச்சாளர்களை மாற்றினார். ஆனால், ரன் எடுப்பதைக் கட்டுப்படுத்த முடிந்ததை தவிர, இருவரையும் பிரிக்க முடியவில்லை.
இருவரும் பிரிந்தால், ஆட்டம் வேறு திசையில் பயணிக்கும் எனத் தெரிந்து ராகுல், கெயில் விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதில் கவனமாக பேட் செய்தனர்.
கடைசியில் அதிரடி
ஆட்டம் நெருக்கடியாகச் செல்லுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கெயில் சில அதிரடியான ஷாட்களை ஆடி வெற்றியை எளிதாக்கினார். 3 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. போல்ட் வீசிய 17-வது ஓவரில் கெயில் ஒரு சிக்ஸரையும், ராகுல்ஒரு சிக்ஸர், பவுண்டரியையும் அடிக்க வெற்றி எளிதானது. கெயில் 35 பந்துகளில் 43 ரன்களுடனும்(2சிஸ்கர்,5பவுண்டரி), ராகுல் 60 ரன்களுடனும் (3சிக்ஸர்3பவுண்டரி)இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
17.4 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து கிங்ஸ் பஞ்சாப் வெற்றி பெற்றது.
விக்கெட் சரிவு
முன்னதாக முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட் செய்தது. டீகாக், ரோஹித் களமிறங்கினர். டீகாக் 3 ரன்னில் ஹூடா பந்துவீச்சிலும அடுத்துவந்த இஷான் கிஷன் 6 ரன்னில் பிஸ்னோய் பந்துவீச்சிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பவர்ப்ளே முடிவில், மும்பை அணி 2 வி்க்கெட் இழப்புகள் 21 ரன்கள் சேர்த்திருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளேயில் சேர்த்த 2-வது மோசமான ஸ்கோர்.
நம்பிக்கை
3-வது வி்க்கெட்டுக்கு ரோஹித், சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சூர்யகுமார் 33 ரன்கள் சேர்த்த நிலையில் பிஸ்னோய் பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். ரோஹிர்த சர்மா களத்தில் இருந்தவரை பவுண்டரி வந்தது, 40 பந்துகளில் ரோஹித் தனது 41-வது அரைசதத்தைநிறைவு செய்தார். 52 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தநிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
மோசமான பேட்டிங்
அதன்பின் வந்த, ஹர்திக் பாண்டியா(1), குர்னல் பாண்டியா(3) என வீணாக விக்கெட்டை இழந்தனர். பொலார்ட் 16 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழகக்காமல் இருந்தார். 105ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த மும்பை அணி அடுத்த 26 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததது.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஷமி, பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT