Published : 23 Apr 2021 04:22 PM
Last Updated : 23 Apr 2021 04:22 PM

கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு வொர்த் இல்லை: பேட்டிங்,பந்துவீச்சு நிலையாகவே இருக்காது: பீட்டர்ஸன் சாடல்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கிறிஸ் மோரிஸ் | படம் உதவி ட்விட்டர்

மும்பை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கிறிஸ் மோரிஸுக்கு ஏலத்தில் கொடுக்கப்பட்ட ரூ.16 கோடி உளவுக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் சாடியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் எனக் கூறப்படும் தெ.ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார். இதுவரை நடந்த எந்த ஏலத்திலும் எந்த வெளிநாட்டு வீரரும் இந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதில்லை. இந்த விலையே கிறிஸ் மோரிஸுக்கு சுமையாகவும், அழுத்தமாகவும் மாறியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே அணியை சிக்ஸர் அடித்து வெல்ல வைத்துள்ளார். ஆனால், பந்துவீச்சு, பேட்டிங்கில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை

14 ஓவர்கள் வீசியுள்ள மோரிஸ் 139 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பையில் நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிராக 3 ஓவர்கள் வீசி 38 ரன்களை மோரிஸ் வாரி வழங்கினார். இதனால் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட வீரரிடம் இருந்து அணி நிர்வாகம் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தாலும் இதுவரை அது வெளிப்படவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் மோரிஸ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிஸுக்கு வழங்கிய தொகை ரூ.16. கோடி மிகஅதிகம் என நான் நினைக்கிறேன். ரூ.16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு கிறிஸ் மோரிஸ் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்தத்தை தற்போது மோரிஸ் உணர்ந்து வருகிறார். உண்மையில் தென் ஆப்பிரி்க்கத் தரப்பிலிருந்து எடுக்க முடிவு செய்யப்பட்ட முதல் வீரர் மோரிஸ் அல்ல.

அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்கமாட்டார். அடுத்தசில போட்டிகளிலும் கிறிஸ் மோரிஸ் இடம் பெறவதற்கான வாய்ப்பு இல்லை. நாம் அவரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறோம் அவரைப் பற்றி அதிகமாகப் பேசுகிறோம் என நினைக்கிறேன்.

இதுபோன்ற வீரர் நிலைத்தன்மையுடன் விளையாடுவார்கள் என நான் நினைக்கவில்லை. மிகவும் தன்மையுடன் கூறுகிறேன், மோரிஸ் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி சிறப்பாகச் சொல்ல ஏதுமில்லை. 2 போட்டிகளுக்கு ரன் அடிப்பார் சில போட்டிகளில் காணாமல் போய்விடுவார்.

இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x