Published : 23 Apr 2021 01:28 PM
Last Updated : 23 Apr 2021 01:28 PM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் முழுமையாக குணமடைந்துவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
ஏறக்குறைய 3 வாரங்கள் சிகிச்சையிலும், தனிமையிலும் இருந்த அக்ஸர் படேல், தனக்கு நடத்தப்பட்ட 3 கரோனா பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்ததையடுத்து அணியின் பயோ-பபுளில் இணைந்தார்.
மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணியினர் தங்கியிருந்தபோது, அக்ஸர் படேலுக்குக் கடந்த மாதம் 28-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி அணியின் பயோ-பபுள் சூழலுக்குச் செல்ல 7 நாட்கள் தனிமையின்போது, அக்ஸர் படேலுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் கடந்த 3-ம் தேதி கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அக்ஸர் படேல், பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டார். அதில், அக்ஸர் படேலுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.
இந்நிலையில் 3 வாரங்கள் சிகிச்சை, தனிமைப்படுத்துதல், பரிசோதனைக்குப் பிறகு அக்ஸர் படேலுக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்ஸர் படேல் இணைந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் அக்ஸர் படேல் வந்தவுடன் அவரை சகவீரர்கள் பாராட்டியும், கட்டி அணைத்தும் வரவேற்றனர். இது தொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிட் நரர்ட்ஜேவுக்கும் கரோனா தொற்று இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், அதன்பின் அந்த அறிக்கை தவறானது எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT