Published : 22 Apr 2021 02:42 PM
Last Updated : 22 Apr 2021 02:42 PM

தோனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே; ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்: பிரையன் லாரா அறிவுரை

சிஎஸ்கே கேப்டன் தோனி | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

சிஎஸ்கே கேப்டன் தோனி சிறிது ஓய்வு எடுக்கலாம். பேட்டிங்கில் மிகவும் சிரமப்பட வேண்டாம் என்று மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு சீசனை தோனி எப்படித் தொடங்கினாரோ அதேபோலத்தான் இந்த சீசனையும் தொடங்கியுள்ளார். கடந்த ஓராண்டாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனாலும், தோனி எந்தவிதமான நீண்டகாலப் பயிற்சியும் இல்லாமல், பேட்டிங்கில் ஏதேனும் அற்புதங்களை நிகழ்த்துவார் என்று அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால், தோனி இதுவரை பேட்டிங்கில் தனக்குரிய ஷாட்களை அடிக்க, தொடர்ந்து போராடித்தான் வருகிறார். அவரின் பேட்டிங் வரிசை சிஎஸ்கே அணியில் இன்னும் குழப்பத்துடனே இருக்கிறது.

இந்த ஆண்டு சீசனும் தோனியின் பேட்டிங்கைச் சுற்றியே விவாதம் ஓடுகிறது. கடந்த 4 போட்டிகளிலும் தோனி பெரிதாக ரன் ஏதும் அடிக்கவில்லை. இந்நிலையில் மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தோனிக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

பிரையன் லாரா

''என்னைப் பொறுத்தவரை தோனி பேட்டிங்கில் பெரிதாக ஏதும் சிரமப்பட வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு, அணிக்காக வேறு ஏதும் பணிகள் இருந்தால் கவனிக்கலாம். தோனியிடம் இருந்து பேட்டிங்கில் பெரிதாக ஏதும் முயற்சிகள், ரன்களை அணி நிர்வாகம் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

தோனி நன்றாக கீப்பிங் செய்திருக்கிறார், ஏராளமான கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார், ஸ்டெம்பிங் செய்துள்ளார். நான் கண்டறிந்தவரை அவருக்கு பேட்டிங் வரிசை மிகத் தொலைவில் இருப்பதால், அவர் சிறிது காலம் ஓய்வெடுக்கலாம்.

நாம் தோனி நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எதிரணி பந்துவீச்சை எவ்வாறு அடித்து நொறுக்கக்கூடிய பேட்ஸ்மேன் தோனி என்பது நமக்குத் தெரியும். சிஎஸ்கே அணியில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சாம் கரன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். களத்துக்கு வந்தது முதல் ஷாட்களை அடிக்கக்கூடிய வீரர் சாம் கரன்.

ஆதலால் தோனி பேட்டிங்கைத் தவிர்த்து கேப்டன்ஷிப்பில் கவனம் செலுத்தினால், 2021ஆம் ஆண்டு சாம்பியனை சிஎஸ்கே அணி வெல்ல வாய்ப்புள்ளது. தோனிக்கு சிறந்த அணி கிடைத்திருக்கிறது. தோனி சிறந்த கேப்டன், அணியில் உள்ள இளம் வீரர்களை உத்வேகப்படுத்தக்கூடிய தலைவர். ஆதலால், அவர் கேப்டன்ஷிப்பில் கவனம் செலுத்தலாம்''.

இவ்வாறு லாரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x