Published : 18 Apr 2021 03:06 PM
Last Updated : 18 Apr 2021 03:06 PM
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா எனும் பிரம்மாஸ்திரம் இருக்கும் வரை அந்த அணியை வீழ்த்த முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.
சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். 10 ஓவர்கள் வரை ஆட்டம் சன்ரைசர்ஸ் அணியின் பக்கம்தான் இருந்தது. 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து சன்ரைசர்ஸ் அணி வலுவாக இருந்தது, ஆனால், அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது சன்ரைசர்ஸ் அணி. அதிலும் குறிப்பாக கடைசி 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைசன்ரைசர்ஸ் அணி பறிகொடுத்தது.
இதில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மிக அற்புதமாக இருந்தது. 4 ஓவர்கள் வீசிய பும்ரா 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடவில்லை. ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக பவுண்டரி கொடுக்காமல் பும்ரா பந்துவீசியுள்ளார்.
பும்ராவின் பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியதாவது:
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மிகப்பெரிய ஆயுதம் இருக்கிறது. அதுதான் ஜஸ்பிரித் பும்ரா எனும் பிரம்மாஸ்திரம். இந்த பிரம்மாஸ்திரம் இருக்கும் வரை மும்பை அணியை வீழ்த்த முடியாது, வீழ்த்துவதும் கடினம்
ஐபிஎல் சீசனில் முதல்முறையாக டாஸ் வென்று, பேட் செய்து குறைந்த ஸ்கோர் செய்து அதை டிபென்ட் செய்துள்ளது மும்பை அணி.அதற்கு காரணம் பந்துவீச்சாளர்கள் மீதான நம்பிக்கைதான்.
குர்னல் பாண்டியா ஓவரை பேர்ஸ்டோ வெளுத்துக்கட்டியபின்தான், கெய்ரன் பொலார்ட் கொண்டுவரப்பட்டார். விஜய் சங்கர்கூட, பொலார்ட் எவ்வாறு பயன்படுத்தப்பட்டாரோ அதுபோலத்தான் சன்ரைசர்ஸ் அணியிலும் பயன்படுத்தப்பட்டார். அதனால்தான் ஹர்திக் பாண்டியாவும் அவ்வப்போது பந்துவீச வேண்டும் என்று கூறுகிறேன். ஹர்திக் பாண்டியா ஸ்லோ பால் நன்றாக வீசக்கூடியவர்.
தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் முதுகு வலி பிரச்சினையால் அவரால் வேகமாகப் பந்துவீச முடியாது என்பது தெரியும். ஆனால், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் வேகம் குறைந்த பந்துவீச்சுதான் எடுக்கிறது என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச முயற்சிக்கலாம்.
உயர்ந்த இலக்காக இருந்தாலும் சேஸிங் செய்ய முடியும், குறைந்த ஸ்கோரையும் டிபென்ட் செய்ய முடியும் என்பதால்தான் மும்பை அணி சாம்பியனாக இருக்கிறார்கள். குறிப்பாக பந்துவீச்சில் பும்ரா, போல்ட், சஹர், மூவரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள்
இவ்வாறு ேசவாக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT