Published : 10 Dec 2015 03:28 PM
Last Updated : 10 Dec 2015 03:28 PM
ஹோபார்ட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 438 ரன்கள் குவித்துள்ளது.
முதல் பந்து போடும் முன்பே மேற்கிந்திய தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறிவந்த நிலையில், கர்ட்லி ஆம்புரோஸ் நேற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று அதி தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனால்.. நடந்தது என்னவோ கடந்த சில ஆண்டுகளாக மே.இ.தீவுகளுக்கு என்ன நடந்து கொண்டிருந்ததோ அதுவே தொடர்வதாக அமைந்தது.
ஆஸ்திரேலியஅணியின் ஆடம் வோஜஸ் (174 நாட் அவுட்), ஷான் மார்ஷ் (139 நாட் அவுட்) ஆகியோர் மே.இ.தீவுகள் பந்து வீச்சை உணவு இடைவேளைக்குப் பிறகு பிய்த்து உதறி 4-வது விக்கெட்டுக்காக இதுவரை 317 ரன்களை எடுத்தனர்.
பசுந்தரை ஆடுகளத்தில் ஜேசன் ஹோல்டர் டாஸில் தோற்றார். அங்கிருந்து அவருக்கு உணவு இடைவேளைக்கு முன்னதாக 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது தவிர ஓய்வு இல்லை ஒழிச்சல் இல்லை. மீண்டும் படுமோசமான பந்து வீச்சு தொடர்ந்தது. பார்மில் இல்லாத ஷான் மார்ஷ் சதம் எடுத்தார். கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் ஆடம் வோஜஸ் கூட 100 பந்து சதம் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறார்.
இந்நிலையில் ஓவர்களை மிக மந்தமாக வீசிய மே.இ.தீவுகள் கடைசியில் விறுவிறுவென ஓவர்களை முடிக்க பகுதி நேர வீச்சாளர்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது, இதுவும் இந்த ரன் குவிப்புக்கு ஒரு காரணம், மேலும் முதல் நாள் ஆட்டத்திலேயே வேகப்பந்து வீச்சாளர் கப்ரியேல் காயமடைந்து விட்டார்.
தொடக்கத்தில் டேவிட் வார்னருக்கு தினேஷ் ராம்தின் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். இது நடந்தது கிமார் ரோச் வீசிய 2-வது ஓவரில். அதைப் பிடித்திருந்தாலும் பெரிதாக ஒன்றும் நடந்திருக்காது என்றாலும் ஒரு கண நேர உற்சாகமாவது அணியிடத்தில் இருந்திருக்கும் அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது. போதாக்குறைக்கு ரெகுலராக கலெக்ட் செய்ய வேண்டிய ஒரு பந்தை 4 ரன்களுக்கு பை வகையில் கோட்டை விட்டதும் நிகழ்ந்தது.
முதல் 10 ஓவர்களிலேயே 70 ரன்கள் விளாசப்பட்டது. வார்னர், பர்ன்ஸ் ஆதிக்கம் செலுத்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் கடைசி 15 ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது இருக்கலாம்.
டெய்லர், ரோச் ஆகியோர் தங்களது பவுன்ஸ் மற்றும் வேகத்தினால் ஆஸ்திரேலிய பேட்டிங்கை ஒரு கை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதற்கான தடயம் எதுவும் இன்று தென்படவில்லை. ஆனாலும் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த பர்ன்ஸின் தடுப்பாட்டத்தைத் தாண்டி ஒரு இன்ஸ்விங்க்கர் உள்ளே செல்ல பவுல்டு ஆனார். கப்ரியேல் அவர் விக்கெட்டைக் கைப்பற்றினார். 11 ஓவர்களில் 75/1 ஆஸ்திரேலியா. கடந்த 5 இன்னிங்ஸ்களில் அவர் 3-வது முறையாக பவுல்டு ஆனதும் கவனிக்கத் தக்கது. டேவிட் வார்னர் 40 பந்துகளில் அரைசதம் கண்டார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாரிக்கன் நன்றாகவே வீசினார். அவரது அதிர்ஷ்டம் ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வார்னர் 11 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து வாரிக்கனின் லெக் திசை பந்தை ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ராம்தின்னிடம் கேட்ச் ஆனது. 121/3 என்ற நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு அரிய தர்மசங்கடம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வோஜஸ், ஷான் மார்ஷ் ஆகியோர் மாற்றி யோசித்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஜேசன் ஹோல்டரின் கேப்டன்சி சொதப்ப தொடங்கியது வோஜஸ், ஷான் மார்ஷுக்கு அவர் தனது களவியூகம் மூலம் எந்த வித நெருக்கடியும் கொடுக்கவில்லை, ஷார்ட் லெக் இல்லை, லெக் திசையில் நிறைய இடைவெளிகள், சில பந்துகள் மட்டையின் உள்விளிம்பில் பட்டு காற்றில் கேட்சாகச் சென்றாலும் ஷார்ட் மிட்விக்கெட்டோ, ஷார்ட் லெக்கோ இல்லாததால் கேட்ச் வாய்ப்புகள் பறிபோயின.
இதனால் 11 ஓவர்களில் வோஜஸ், மார்ஷ் 82 ரன்களைச் சேர்த்தனர், இதில் வோஜஸ் அதிரடி காட்டினார், மார்ஷ் சொத்தையாக தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தார் அவரை நெருக்கியிருந்தால் ஆட்டமிழந்திருப்பார், ஆனால் ஹோல்டருக்குக் கவலை ஓவர் ரேட் மந்தமாகி வந்ததே. அதில் கவனம் செலுத்தி ஆட்டத்தைக் கோட்டைவிட்டார். லெக் திசையில் ஏகப்பட்ட பவுண்டரிகள் விளாசப்பட்டது. பந்து வீச்சின் அளவு மற்றும் திசை படுமோசமாக அமைந்தது.
இனி என்ன? ஆஸ்திரேலிய டிக்ளேரை எதிர்பார்த்து ஆடி பிறகு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டும். இதுதான் மே.இ.தீவுகளின் நிலையாக உள்ளது.
ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்துள்ளது. வோஜஸ் 204 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 174 ரன்கள் எடுத்தும், ஷான் மார்ஷ் 204 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 139 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT